ஈரானுடன் உறவு கொண்டதற்காக பாகிஸ்தான் மீது பொருளாதார தடை - அமெரிக்கா
"ஈரானிடமிருந்து, பைப்லைன் மூலம், எரிவாயுவை பெற்றால், பாகிஸ்தான் மீது பொருளாதார தடை பாயும்' என, அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானிடமிருந்து, குழாய் மூலம், எரிவாயுவை பெற பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கான துவக்க விழாவில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும், ஈரான் அதிபர் அகமதி நிஜாத்தும் பங்கேற்றனர். ""இந்த திட்டத்தை தடை செய்ய எந்த நாட்டுக்கும் அதிகாரம் கிடையாது,'' என, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி விக்டோரியா நூலண்ட் கூறியதாவது,
அணு ஆயுதங்கள் தயாரிக்கும் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டிடமிருந்து, கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகளை வாங்க மற்ற நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி, பாகிஸ்தான், ஈரானிடமிருந்து எரிவாயுவை பெற திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் தனது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான உதவிகளை, அமெரிக்கா செய்து வருகிறது. இதற்காக, பாகிஸ்தானில், சில அணைகளை கட்டியுள்ளோம், அனல் மின்நிலையங்களையும் நிறுவியுள்ளோம்.
இந்நிலையில், ஈரானிடம் தொடர்பு கொண்டு, எரிவாயுவை பாகிஸ்தான் பெற முயன்றால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை பாயும். இவ்வாறு விக்டோரியா நூலண்ட் கூறினார்.

Post a Comment