இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்த முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி வெளியேறினார்
மாலத்தீவில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த அப்துல் கயிப்பை கடந்த 2008-ம் ஆண்டு முகமது நசீத் தோற்கடித்து அதிபராக பதவியேற்றார். பின்னர் உள்நாட்டு கிளர்ச்சியின்போது பதவியிழந்த அவர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், நசீத் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக இந்திய தூதரகத்தில் கடந்த 13-ம் தேதி தஞ்சம் அடைந்தார் நசீத். இதனால் அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அவருக்கு இந்திய தூதரகம் புகலிடம் அளிப்பதை கைவிட்டு, அவரை ஒப்படைக்க வேண்டும் என்று மாலத்தீவு அரசு வலியுறுத்தியது.
அதேசமயம் 20-ம் தேதி மாலை 4 மணிக்குள் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதுதொடர்பாக இந்திய தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், 11 நாட்களாக இந்திய தூதரகத்தில் தங்கியிருந்த நசீத், இன்று தூதரகத்தை விட்டு வெளியேறினார். அவருடன் இருந்த எம்.பி.க்களும் வெளியேறினர். விசாரணைக்கு ஆஜராக சம்மதம் தெரிவித்து அவர் வெளியேறியதாகவும், அவர் தூதரகத்திற்கு திரும்பி வரமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொந்த விருப்பத்தின் பேரில் அவர் தூதரகத்தை விட்டு வெளியேற முடிவு செய்ததாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment