சீனாவில் பாடசாலை மாணவர்களின் சீருடையில் புற்றுநோய் அபாயம்..!
சீனாவில் பள்ளி மாணவர்களின் சீருடை துணியில், புற்றுநோய் ஏற்படுத்தும் வர்ணச்சாயம் இருந்ததை தொடர்ந்து, அந்த சீருடையை அணிய மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் 21 ஆரம்ப மற்றும் நடுத்தர பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் மாணவர்களுக்கான சீருடைகளை யுஷியா ஜவுளி நிறுவனம் சப்ளை செய்து வந்தது. இதனிடம் இருந்து சமீபத்தில் அரசு பள்ளிகளுக்கு சீருடைகள் வாங்கி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. சீருடைகளின் தரம் குறித்து, ஷாங்காய் நகராட்சி தர மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு பிரிவினர் சமீபத்தில் சோதனை செய்தனர்.
இதில் சீருடை துணியில், தடை செய்யப்பட்ட வர்ணச்சாயம் இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர்கள் இந்த துணியை தொடர்ந்து அணிந்தால், அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. யுஷியா நிறுவனம் சப்ளை செய்த 6 கண்டய்னர் சீருடைகளில் தடை செய்யப்பட்ட இந்த வர்ணச்சாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த சீருடைகளை மாணவர்கள் அணிய வேண்டாம் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தரமற்ற சீருடைகளை சப்ளை செய்த நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment