Header Ads



முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி விவகாரம் - மாவட்ட அரச அதிபரின் விளக்கம்


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகள் அற்ற மக்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய முறையில் அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகள் பகிர்ந்தளிப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக   ஜனாதிபதிக்கு அனுப்புமாறு கோறி தம்மிடம் வழங்கப்பட்ட மகஜர் குறித்து தமது விளக்கத்தை அரசாங்க அதிபர் விளக்கி ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.

கடந்த 3 தசாப்தமாக வடக்கில் காணப்பட்ட அசாதாரன சூழல் காரணமாக இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து வேறு பல மாவட்டங்களில் வாழ்ந்து வந்தனர். தற்போதைய சமாதான சூழ் நிலையில் மீண்டும் அவர்கள் அவர்களது சொந்த கிராமங்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக வருகைத்தருகின்றனர்.இவர்கள் இம்மாவட்டத்தில் நிரந்தரமாக வாழ்ந்த இடங்களுக்கு வருகின்ற போது இங்கு அவர்களது காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனை கவனத்திற் கொண்டு அரசாங்கத்தின் காணி வழங்கல் சுற்றிக்கைக்கமைய,ஜனாதிபதி செயலணியின் அனுமதி பெறப்பட்டு,பிரதேச செயலாளர்கள் ஊடாக உரிய முறையில் காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

அதே போல் இம்மாவட்டத்தில் காணியற்றவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எமக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.அதற்கமைய இன,மத ,மொழிக்கப்பால் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அதே வேளை முல்லை மாவட்டத்தில் மீள்குடியேறும் இங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு குடியிறுப்பதற்கு தேவையான காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இந்த  காணிகள் வழங்கப்படும் போது குடியிறுப்பதற்கு தேவையான அரை ஏக்கர் காணி மட்டுமே வழங்கப்படுவதாகவும்,வெளி மாவட்டங்களை சேர்ந்த எவருக்கும் இங்கு காணிகள் வழங்கப்படுவதில்லை என்றும் அரசாங்க அதிபர் வேதநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.