Header Ads



ஹலால் விவகராம் உணர்ச்சிவயப்பட்டு முடிவு செய்யப்படக்கூடிய விடயமல்ல


(அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப்)

ஹலால் விவகாரம் திட்டமிட்ட அடிப்படையில் இனவாதக் குழுவினரின் அழுத்தத்தின் மூலம் ஒரு பாரிய பூதாகரமான விடயமாக பரினமித்துள்ளது. ஹலால் குறித்து விளக்கமின்மை, அல்லது அதுகுறித்த சரியான பார்வைகள் இன்மை இந்த விடயத்தின் பூதாகரமான தன்மைக்கான காரணமாக இருக்க முடியாது. மாறாக இங்கே வேறொரு நிகழ்ச்சிநிரல் இருப்பது புலப்படுகின்றது. இருப்பினும் முஸ்லிம் சமூகம் அல்லது ஹலால் சான்றிதழை விநியோகிக்கும் ஜம்இய்யதுல் உலமா அமைப்பு என்பன மிகவும் நிதானத்துடன் இவ்விடயத்தை கையாளவேண்டும். இனவாத பிரிவினைவாத நிகழ்ச்சிநிரல்களுக்கு கட்டுப்பட்டு அல்லது அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் எவ்வித முடிவினையும் நோக்கி நாம் நகர்ந்துவிடக்கூடாது. எனினும் ஹலால் விவகாரம் குறித்து ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி நகரவேண்டிய தேவைப்பாட்டுடன் முஸ்லிம் உம்மத் இருக்கின்றது. ஹலால் குறித்து இனவாதிகளின் அழுத்தங்களை ஒரு புறம் வைத்துவிட்டு ஒரு மீளாய்வுக்கு நாம் தயாராக வேண்டும்.

ஹலால் குறித்த இஸ்லாமிய நோக்கு:

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். சூறா அல் பகரா :168

மேலே குறிப்பிட்டுள்ள அல் குர்ஆனிய வசனம் பொதுவாக மனிதர்களை நோக்கி பேசியிருந்தாலும் அதனைப் பின்பற்றக்கூடியவர்களாக முஸ்லிம்களே இருக்கின்றார்கள். ஹலால் ஹறாம் என்னும் பதப்பிரயோகங்கள் பொதுவாக மனிதவாழ்வோடு தொடர்புபடுகின்றபோதும், இங்கே அது உணவுகளோடும் குடிபானங்களுடனும் அன்றாடப்பாவனைப் பொருட்களுடனும் தொடர்புற்றே நோக்கப்படுகின்றது. அந்தவகையில் ஒரு முஸ்லிம் ஹலாலானவற்றை உண்பதும் குடிப்பதும் அவனுக்கு விதியாக்கப்பட்டிருக்கின்றது. 

ஹலாலைத் தீர்மானித்தல்: ஒரு முஸ்லிம் ஹலாலைத் தீர்மானிப்பதற்குரிய விதிகளை அல்-குர்ஆனும் சுன்னாவும் மிகவும் தெளிவாக வரையறுத்து குறிப்பிட்டுள்ளது. எனவே ஒரு முஸ்லிம் மேற்படி வழிகாட்டல்களை அனுசரித்து அவனது உணவுகளையும் குடிபானங்களையும் தீர்மானித்துக் கொள்தல் வேண்டும். இதுவரைகால இலங்கை முஸ்லிம் உம்மத் ஹலாலான விடயங்களைத் தீர்மானிப்பதற்கு ஒரு சில நடைமுறைகளை கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அவை மிகவும் இயல்பான எமது சமூகத்தோடு உடன்பட்டு செல்கின்ற விடயங்களாகும். உதாரணமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளில் சாப்பிடும்போது ஹலால் குறித்து நாம் அலட்டிக்கொள்வது கிடையாது, முஸ்லிமல்லோதோரின் வீடுகளில் சாப்பிடும்போது கூட நாம் ஹலால் குறித்து கவனம் செலுத்துவது நமது நடைமுறை. ஹலாலைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு முஸ்லிமினதும் தனிப்பட்ட விடயமாகவே கொள்ளப்படுகின்றது, அதாவது ஒரு முஸ்லிம் அதனைத் தீர்மானிக்கும் ஆற்றல் உடையவனாவான்.

ஹலாலைத் தீர்மானிப்பதற்கு இதுவரைகாலமும் நடைமுறையில் இருந்த முறைமைகள்

*         ஹலால் ஹறாம் நடைமுறையில் மாமிசங்களைப் பெறுத்தவரை முஸ்லிம்களால் அறுக்கப்பட்ட மாமிசத்தை நாம் ஹலால் என அடையாளப்படுத்துகின்றோம்

*        முஸ்லிம்களால் சமைக்கப்பட்ட உணவில் ஹறாம் கலந்திருக்காது என நாம் அடையாளப்படுத்துகின்றோம்

*         மாமிசக் கொழுப்பு கலந்த உணவுப் பதார்த்தங்களை முஸ்லிம்கள் பயன்படுத்துவது குறைவு

*         ஏனைய பண்டங்களில் ஹலால் ஹறாம் குறித்து நாம் அதீத அக்கறை எடுத்துக் கொள்வதில்லை

*         வெளிநாட்டு இறக்குமதிகளில் அறபுப் பதங்கள், ஹலால் சின்னங்கள் இருக்கின்றனவா என நாம் அவதானிப்பது வழமை

*         சந்தேகத்துக்கிடமானவற்றிலிருந்து தவிர்ந்திருத்தல்

இத்தகைய நடைமுறைகளே ஹலாலைத்தீர்மானிப்பது தொடர்பில் எம்மிடம் காணப்பட்டன.

இஸ்லாமிய ஒழுங்கிலும் இத்தகைய நடைமுறையே சரிகாணப்பட்டது. ஒரு மனிதன் தான் வாழும் சூழல், அவனது பழக்க வழக்கங்கள், ஒரு சமூகத்தின் நடைமுறை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு அவனது உணவுப்பழக்கங்களை அமைத்துக்கொள்வான். இதுவே இயல்பானதாகவும் நடைமுறைச்சாத்தியமானதாகவும் இருக்கின்றது.

ஹலாலைத் தீர்மானிக்கும் நிறுவனமயப்படுத்தப்பட்ட நடைமுறை:

உலகம் பல மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி உச்ச அளவில் காணப்படுகின்றது. மனிதர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே முஸ்லிம்களுக்கு ஹலாலையும் ஹராத்தையும் பிரித்தறிவிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தற்போதைய உலகில் ஏற்பட்டிருக்கின்றது. எனவே ஹலாலைத் தீர்மானிக்கும் தனிமனித நடைமுறை ஒரு நிறுவனமயப்படுத்தலை வேண்டி நிற்கின்றது. எனவே ஹலால் சான்றிதழ் நடைமுறை கால சூழல் மாற்றங்களினால் தோன்றும் நுகர்வோர் தேவையினை நிவர்த்திக்கும் ஒரு வர்த்தக ஒழுங்காக மாற்றம் கண்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் காணப்பட்டுகின்றன, உணவுப் பொருட்கள் மாத்திரமன்றி அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், மருந்துகள் போன்றவற்றிலும் ஹலால் குறியீடுகளை நாம் அவதானிக்கின்றோம். இது வர்த்தக ரீதியாக மிகமுக்கிய குறியீட்டு நடைமுறையாக மாற்றம் கண்டுள்ளது. இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையினை இலங்கை முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற சன்மார்க்க சபையாக திகழும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிமுகம் செய்தது. ஆரம்ப காலங்களில் இது மிகவும் வரவேற்கப்பட்ட ஒருவிடயமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமகால அசாதாரண நிலை

ஜம்இய்யதுல் உலமா சபையின் ஹலால் சான்றிதழ் நடைமுறையானது முஸ்லிம்களிடையேயும் ஒரு சில விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. ஹலால் சான்றிதழ் வழங்கும் விடயத்தில் பின்பற்றப்பட்ட ஒரு சில வர்த்தகநோக்கிலான நிகழ்வுகள் அத்தகைய விமர்சனங்களுக்கு காரணமாகின. இருப்பினும் தற்போதைய இனவாத கருத்துக்களைப் பரப்புவோர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினை இலக்குவைத்து ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். இக்கோரிக்கியினை முன்வைப்போர் இதுவரை எவ்வித நியாயமான காரணங்களையும் முன்வைக்கவில்லை. இனவாதக் கோஷங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய கோரிக்கையினை முன்வைக்கின்றார்கள். இவ்வாறான கோரிக்கையினால் இனரீதியான முறுகல்கள் வளர்ச்சி காணுமேயன்றி குறையப்போவதில்லை. இருந்த போதிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை போன்ற பொறுப்பு வாய்ந்த சமூகரீதியான அமைப்புகள் மிகவும் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும். 

ஹலால் சான்றிதழ் நடைமுறை குறித்து நாம் சிந்திக்கின்றபோது பின்வரும் விடயங்கள் முக்கியத்துவப்படுத்தப்படவேண்டும்

*         முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் தேசமொன்றில் ஹலால் ஹறாம் நடைமுறைகள் குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டம்.

*         ஹலால் நடைமுறையில் முஸ்லிம்களின் வகிபாகம் அல்லது இலங்கை முஸ்லிம்களுக்கு ஹலால் சான்றிதழ்களின்பால் உள்ள தேவை

*         இனரீதியான உணர்வலைகள் அதிகமாக இருக்கும் இலங்கை போன்ற தேசமொன்றில் மார்க்க ரீதியான குறியீட்டு அமுலாக்கத்தின் தன்மை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது

*         ஹலால் சான்றிதழின் வர்த்தக ரீதியான முக்கியத்துவம்

*         சமூக அமைப்பாக இயங்கும் ஜம்இய்யதுல் உலமா ஹலால் சான்றிதழ்களை விநியோகிப்பதில் காணப்படும் சட்டரீதியான நடைமுறைகள்

*         பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பான்மை நிலைப்பாடுகள் 

*         முஸ்லிம் சமூகத்தின் இருப்போடு ஹலால் விவகாரம் தொடர்புறும் விதம் அல்லது அதன் தாக்கம்

*         சகவாழ்வு நல்லிணக்கம் என்பதில் ஹலால் சான்றிதழ் செலுத்தும் எதிர்த்தாக்கங்கள்

போன்ற விடயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். எனவே இவ்வாறான விடயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நாம் ஹலால் சான்றிதழ் குறித்து ஒரு தீர்க்கமான முடிவினை அடையமுடியும். அல்லாதவிடத்து வெறுமனே உணர்ச்சிவயப்பட்டு, அல்லது அழுத்தங்களுக்கு உட்பட்டு தீர்மானங்களைப் எட்டிக்கொள்வோமாயின் அது எமது தீர்மானத்தை மாத்திரமல்ல எமது சமூகத்தையும் பலமிழக்கச்செய்யும் என்பது திண்ணம்.

No comments

Powered by Blogger.