Header Ads



ஹலால் சான்றிதழ் வழங்கும் ஜம்இய்யத்துல் உலமாவின் பணியை விட்டுவிடக்கூடாது


ஹலால் சான்றிதழ் வழங்குதல் என்பது யார் மீதும் கட்டாயமற்ற ஒன்று என்பதால் விரும்புபவர்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் ஜம்இய்யத்துல் உலமாவின் பணியை விட்டுவிடக்கூடாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இது விடயத்தில் உலமா சபையின் உறுதியான நிலைப்பாடு பாராட்டுக்குரியதாகும். ஹலால் சான்றிதழ்  வழங்குதலை வாபஸ் பெற்றால் பின்னர் தாடிவைத்தல், பெண்களின் ஆடை என அனைத்தையும் தடைசெய்யக்கோருவர். ஹலால் சான்றிதழ் எந்த வகையிலும் சிங்கள மக்களுக்கு பாதகமானதாக இல்லை என்பது நாடறிந்த விடயம். அவர்களின் பால் சோற்றுக்கு உலமா சபையால் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. 

சிங்கள புது வருடத்தின் போது முஸ்லிம்களின் எப்பொருளும் தமக்கு வந்து சேரக்கூடாது என்பதில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் பாவிக்கும் மின்சாரம் மற்றும் வாகனம் என்பனவற்றுக்கான டீசலும்  பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளிலிருந்தே வருகின்றன என்ற கருத்தின் அடிப்படையில் அதனை வேண்டுமானால் தவிர்த்துக்கொள்ளட்டும்.

பொதுவாக தம்புள்ள சம்பவத்தை தொடர்ந்து, அதன் போது அரசினது அசட்டை மற்றும் முஸ்லிம் ஏமாற்றுக்கட்சிகளின் காட்டிக்கொடுப்புக்களை தொடர்ந்து நாட்டில் இனவாதக்கருத்துக்கள் மிக மோசமாக பரப்பப்படுவது  கவலை தருவதாக உள்ளது. ஓர் இனத்துக்கெதிராக மிக மோசமாக கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது அதனை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருப்பது வியப்பாக உள்ளது.

1980களில் அமைச்சர்கள் இருந்தும் பயன் என்ன என கேட்டு துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடமும் ஏனைய முஸ்லிம் கட்சிகளிடமும் இதே கேள்வியை முன் வைக்கின்றோம். அதே வேளை இக்கேள்வியை முஸ்லிம்கள் தமது கட்சித்தலைவர்களிடம் பகிரங்கமாக முன்வைக்காமலிருப்பது அனைத்தையும் விட வியப்பாக  உள்ளது. 

No comments

Powered by Blogger.