Header Ads



அச்சமின்றி சுதந்திரமாக ஒன்று கூட வழி வகுத்த ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன் - அதாவுல்லா


(ஜே.எம். வஸீர்)

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் வருடந்தோறும்  நடைபெறும் சுவர்ண புறவர விருது வழங்கும் விழாவும் உள்ளூராட்சி தேசிய மாநாடும் இன்று காலை 10.30 மணியளவில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் இன்று 08-01-20013 அலறி மாளிகையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டதுடன் மற்றும் பல அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் உள்ளூராட்சி துறைசார் உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,
  
நமது நாட்டில் பயங்கரவாத சூழல் முற்றாக இல்லாதொழிந்த நிலையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தீவின் எல்லாப்பாகங்களிலுமுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், துறைசார் உயர் அதிகாரிகள் அனைவரும் இன்றைய தினத்தில் அச்சமின்றி சுதந்திரமாக ஒன்று கூடியுள்ளனர். இச்சூழலுக்கு வழி வகுத்த நமது நாட்டின் தலைமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு முதற்கண் நன்றி கூறுகின்றேன். இன்று நடைபெறும் 2012 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி தேசிய மாநாடு அன்னாரின் பிரதம பங்கேற்புடன் நடைபெறுவது மகிழ்ச்சி தருகிறது. 

கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்ற அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணத்திற்கமைய நாட்டின் பொருளாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கேற்ப கிராமங்களுக்குத்  தலைமை கொடுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களும் பலப்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.  வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை முறையாக  நிறைவேற்றிக் கொடுக்கும் தார்மீகப் பொறுப்பு உள்ளுராட்சி சபைகளுக்கிருக்கின்றன. எனவேதான் நமது ஜனாதிபதி அவர்கள் மஹிந்த சிந்தனையில் உறுதியளித்தவாறு உள்ளூராட்சிச் சபைகளை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டம், உள்ளுராட்சி விஷேட ஏற்பாடுகள் சட்டம் என்பனவற்றை திருத்துவதற்கான வரைபுகள்   பாராளுமன்றத்தில் என்னால் முன்வைக்கப்பட்டன. 2012.10.10ஆம் திகதி அத்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் கிடைத்த பெருவெற்றியாகும். உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் என்ற வகையில் இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனக்கும் பெருமை தருகின்றது. இந்தத்  திருத்தச் சட்டங்களின் மூலம் உள்ளூராட்சிப்  பிரதேசங்கள் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு மக்களுக்கான தலைமைகள் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் வட்டாரங்களின் அபிவிருத்திகளே நாட்டின் அபிவிருத்தியின் அத்திவாரங்களாக மாறப் போகின்றன. 

வளர்ச்சியடைந்து வரும் கிராமங்களின் தேவைகளுக்கேற்றவாறு அவைகளைச்  சிறிய நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்டம்  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சிச் சபைகளின் முன் மொழிவுகளினூடாக நடைபெற்று வருகின்றது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சுமார்  100 உள்ளூராட்சிப் பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு 'புற -நெகும' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களாக கட்டியெழுப்புவதற்குரிய ஏற்பாடுகளையும் எனது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. 

நாட்டில் காணப்படும் பெருந்தெருக்களை மாத்திரமன்றி ஏனைய வீதிகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில் ஜனாதிபதி அவர்கள் அக்கறை கொண்டுள்ளார். இதற்கிணங்க எனது அமைச்சு வெளிநாட்டுக்கடன் உதவிகளைப் பெற்றும் உள்நாட்டு நிதியங்களிலிருந்தும் பண ஒதுக்கீடுகளைச் செய்து மாகாண பெருந்தெருக்களையும் உள்ளூர் வீதிகளையும் அபிவிருத்தி செய்து வருகின்றது. 

பின்தங்கிய உள்ளூராட்சி நிறுவனங்களை இனங்கண்டு அவைகளையும்  கட்டியெழுப்புவதற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.  திண்மக்கழிவு முகாமைத்துவம் உலகம் முழுவதும் ஒரு சவாலாக அமைந்திருக்கும் இவ்வேளையில் நாமும் அதற்கு முகம் கொடுக்க  வேண்டியுள்ளது. இதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் பண ஒதுக்கீடுகள் செய்யப்படுவதோடு அதற்குத் தேவையான இயந்திரங்களும்  ஏனைய வசதிகளும் எமது அமைச்சினால் வழங்கப்படுகின்றன. இச்சவாலுக்கு முகம்கொடுக்க உள்ளூராட்சித்தலைமைகள் திடசங்கற்பம் பூணவேண்டுமென இன்றைய இந்த ஒன்றுகூடலில் வேண்டிக் கொள்கிறேன். நமது நாட்டில் இயற்கை வளங்களைப்பேணிப்பாதுகாப்பதோடு அவைகள் மாசுபடாதவாறும் மாற்றமடையாதவாறும் மக்களின் தேவைகளுக்குப் பயன்படத்தக்;கவாறும்  திட்டங்களை வகுக்க வேண்டியது நம்  எல்லோருடைய பொறுப்புமாகும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

'நல்லாட்சி' தொடர்பாக உலகம் முழுவதும்  அதிகமாக பேசிக் கொண்டிருக்கும்  இவ்வேளையில் நமது மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருக்கின்றது . எனவே நமது நாட்டில் ஏனைய நிறுவனங்கள் மாத்திரமன்றி உள்ளூராட்சி நிறுவனங்களும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு திடசங்கற்பம் பூணவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இதற்காக இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் பங்களிப்பினையும் பாராட்டுகின்றேன்.  

மாநாட்டில் விருதுகளைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளினது தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊழியர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த பாராட்டுக்களையும்   தெரிவித்துக் கொள்கின்றேன். 

இம்மாநாட்டின் போது முதலாம் இரண்டாம் இமூன்றாம் இஇடங்களைப் பெற்ற மாநகர, நகர, பிரதேச சபைகள் 


மாநகர சபை

முதலாம் இடம் குருணாகல் மாநகர சபை
இரண்டாம் இடம் மாத்தறை மாநகர சபை
மூன்றாம் இடம் கண்டி மாநகர சபை

சிறந்த நகர சபை

முதலாம் இடம் குளியாப்பிட்டி நகர சபை
இரண்டாம் இடம் பலாங்கொட நகர சபை
மூன்றாம் இடம் சீதாவக்கை நகர சபை

பிரதேச சபை

முதலாம் இடம் வாரியப்பொல பிரதேச சபை
இரண்டாம் இடம் குருணாகல் பிரதேச சபை
மூன்றாம் இடம் பஸ்பாகே கோரலை பிரதேச சபை


திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாநகர, நகர, பிரதேச சபைகள்

மாநகர சபை

முதலாம் இடம் பண்டாரவளை மாநகர சபை
இரண்டாம் இடம் நுவரெலியா மாநகர சபை
மூன்றாம் இடம் மாத்தறை மாநரக சபை

நகர சபை

முதலாம் இடம் பலாங்கொட நகர சபை
இரண்டாம் இடம் குளுயாப்பிட்டிய நகர சபை
மூன்றாம் இடம் நாவலப்பிட்டி நகர சபை

பிரதேச சபை

முதலாம் இடம் எட்டியாந்தோட்டை பிரதேச சபை
இரண்டாம் இடம் வாரியப்பொல பிரதேச சபை
மூன்றாம் இடம் திருக்கோவில் பிரதேச சபை











No comments

Powered by Blogger.