கற்பழிக்கவரும் ஆண்களை கொலை செய்யுங்கள் - மாணவிகளுக்கு இலவச மிளகாய் தூள்
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் பயணிகளிடம் நூதன விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஏ.கே.கான் உத்தரவின் பேரில் கடப்பா மாவட்டத்தில் முதன்முதலாக விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது.
பஸ் நிலையத்தில் பெண் கண்டக்டர்கள் நின்று கொண்டு பஸ்சில் பயணம் செய்யும் பெண்களுக்கு ரோஜா பூ கொடுத்து துண்டு பிரசுரங்களை விநி யோகித்தார்கள். அதில், தனியார் பஸ்சில் பயணம் செய்ததால்தான் டெல்லியில் மருத்துவ மாணவிக்கு அந்த கொடூரம் நடந்துள்ளது.
அரசு பஸ்சில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. எனவே நீங்கள் அரசு பஸ்சில் பயணம் செய்யுங்கள். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மாநிலம் முழுக்க இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடக்க இருக்கிறது.
இதற்கிடையே ஐதராபாத் மாதாபூர் பகுதியில் உள்ள ஐ.டி. பார்க்கில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஆந்திர மாநில டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி கலந்து கொண்டார்.
ஆண்களின் கற்பழிப்பு கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பெண்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி பதில் கூறும்போது, பாலியல் செய்யும் ஆண் களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள அவர்களை கொலை செய்ய தயங்க கூடாது.
கொலை ஒரு குற்றமாக இருந்தாலும் எந்த பின்னணியில் கொலை நடந்தது என்பதை ஆராய்ந்துதான் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று கூறினார்.
குண்டூரில் உள்ள மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நகர போலீஸ் சூப்பிரண்டு ரவிகிருஷ்ணா கூறும்போது, உங்களுக்கு எதிராக கொடுமை செய்யும் ஆண்களை தைரியமாக எதிர்க்க வேண்டும். அவர்கள் முகத்தில் மிளகாய் பொடியை வீசிவிட்டு எங்களுக்கு தகவல் சொல்லுங்கள். தகவல் வந்த அடுத்த நிமிடத்தில் போலீசார் அங்கு நிற்பார்கள். பெண்களை நாம் சக்தியாக வணங்குகிறோம். அப்படிப்பட்ட உங்களுக்கு கொடுமை வரும்போது தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அனைவரும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மிளகாய் பொடி பொட்டலம் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

Post a Comment