மூத்த ஊடகவியலாளர் லசந்த நினைவுகள் (வீடியோ)
இலங்கையின் சுதந்திர ஊடகத்துறைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1958ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் பிறந்த லசந்த விக்ரமதுங்க 50ஆவது வயதில் கொலைசெய்யப்பட்டார். அவர் இலங்கையில் பிரபலமான சட்டத்தரணியுமாவார்.
மிகச்சிறந்த ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டபோது அவர் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக கடமையாற்றி வந்தார்.
மனித உரிமை செயற்பாட்டாளரான அவர், 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் கொலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி இன்னமும் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக சுதந்திர ஊடக அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அமரர் லசந்த படுகொலை செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் இன்றுடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லசந்த உயிரிழந்தார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத அரசியல் காலாச்சாரம் நாட்டில் நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.ஊடக அடக்முறைக் கலாச்சாரம் தொடர்ந்து நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.அரசாங்க அணுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான குற்றச் செயல்களினால் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இரண்டு சிரேஸ்ட சட்டத்தரணிகளை அச்சுறுத்திய அதேவேளை, களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவை சுட்டுக் கொலை செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் தரப்பினர், நீதவான்கள், சட்டத்தரணிகள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அச்சுறுத்தக் கூடிய அதிகாரமும் பலமும் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Post a Comment