கடந்தவருடத்தில் 3163 லஞ்ச முறைப்பாடுகள் - கல்வித்துறை சாதனை படைத்தது
(அத) லஞ்சம் பெறுவது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக லஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டில் மாத்திரம் லஞ்சம், ஊழல் பெற்றமை தொடர்பில் 3163 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் லக்ஷமி ஜயவிக்ரம தெரிவித்தார்.
2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2012ம் ஆண்டில் லஞ்சம் பெற்ற சம்பவங்கள் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2012ம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற லஞ்ச, ஊழல் முறைப்பாடுகளில் 440 முறைப்பாடுகள் கல்வித்துறை சம்பந்தப்பட்டதென தெரிவித்த லக்ஷமி ஜயவிக்ரம, பொலிஸ் துறை தொடர்பில் 318 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூராட்சி சபை தலைவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற லஞ்ச, ஊழல் முறைப்பாடுகளில் உயர்வு காணப்படுவதாக அவர் கூறினார்.
லஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் 2012ம் ஆண்டு 147 தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் 77 தேடுதல்கள் வெற்றியளித்துள்ளன.
அதன்போது 95 பேர் கைது செய்யப்பட்டதுடன், இருபது பேர் பொலிஸார் என லஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து எந்தவொரு நபரும் 1954 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்க முடியும் என லஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Post a Comment