சீனாவின் செல்வாக்கை சந்தேகத்துடன் நோக்குவது துரதிஷ்டவசமானது - கோத்தா
இந்து சமுத்திரத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் சந்தேகத்துடனும், விசனத்துடனும் பார்ப்பது துரதிர்ஸ்டவசமானது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலியில் 13-12-2012 ஆரம்பமான, கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் தொடக்கவுரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்து சமுத்திரத்தின் எதிர்காலம் தொடர்பாக இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவும் கணிசமான கடற்படை வலுவை கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது ஒன்றும் இரகசியமானது அல்ல. அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளில் சீனாவின் பொருளாதார செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. இதை இந்தியாவும் அமெரிக்காவும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றன.
இந்து சமுத்திரத்தில் அதிகரித்து வரும் சீனாவின் கடற்படை வலு பற்றியும் இந்தப் பிராந்தியத்தில் கடல் கொள்ளைக்கு எதிரான சீனாவின் செயற்பாடுகள் அதிகரித்து வருவது குறித்தும் இந்த நாடுகள் விசனம் கொண்டுள்ளன. கைத்தொழிலில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு வரும் சீனாவுக்கு தொடர்ச்சியாக எண்ணெய் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய தேவையுள்ளது. இதற்காகவே சீனா இந்தப் பிராந்தியத்தில் தனது கடற்படை வலுவை அதிகரித்து வருகிறது. இந்தப் பாதுகாப்பு உணர்வை இலகுவில் விளங்கிக் கொள்ள முடியும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கியமான இடங்களில் சீனாவின் முதலீட்டில் உருவாக்கப்பட்ட துறைமுகங்கள் இருப்பதை இந்தியா விரும்பவில்லை. தென் புறத்தினால் தம்மை முற்றுகையிடும் முயற்சியாக இந்தியா இதைப் பார்க்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகம் முற்றுமுழுதாக பொருளாதார நலன் சார்ந்தது. அம்பாந்தோட்டைக்கு 10 கடல் மைல் தெற்காக தினமும் 200க்கு மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கின்றன. சிறிலங்காவின் பொருளாதார நலனுக்கு பயன்படுத்தக் கூடிய இந்தத் துறைமுகம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே கலந்துரையாடப்பட்டது.
கடும் நிபந்தனைகள் இல்லாமல் எந்த நாட்டில் இருந்து எந்த உதவி வந்தாலும் அதை சிறிலங்கா வரவேற்கிறது. இதை ஒரு நாட்டுடன் அணி சேருவதாக அர்த்தம் கொள்ளலாகாது. பல நாடுகளின் வலுப் பாதுகாப்பு என்பது, தமது சக்தி தேவைக்காக இந்து சமுத்திரத்தின் ஊடாக எரிபொருளைக் கொண்டு செல்வதில் தங்கியுள்ளது.
கடல்கொள்ளை, பயங்கரவாதம், ஆட்கடத்தல், போதைபொருள் கடத்தல், சட்டவிரோதமான கழிவு கொட்டுதல் பலவிதமான அச்சுறுத்தல்களுக்கு இந்து சமுத்திரம் முகம் கொடுத்துள்ளது. இவை இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு, உறுதிப்பாடு நிலைபெறும் தன்மை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்தப் பிராந்தியத்தின் நலனில் அக்கறையுள்ள நாடுகளிடையே பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் 'காலி கலந்துரையாடல்‘ முக்கிய பங்களிப்புச் செய்யும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.




Post a Comment