முட்டையை யார் இட்டாலும் கொக்கரிப்பது ஜனாதிபதிதான் - நக்கல் அடிக்கிறது ஜே.வி.பி.
பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் முட்டையை யார் இட்;டாலும் கொக்கரித்தது ஜனாதிபதி என ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே ஜனாதிபதியே இதனை வழி நடத்தி வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று 12-12-2012 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய சுயாதீன குழுவொன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த சுயாதீன குழு என்பது நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நாடகத்தின் மற்றுமொரு அங்கமே. ஜனாதிபதி உட்பட அரசாங்கம், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விசாரணை நடத்தி சம்பித்துள்ள அறிக்கையான எந்த சுயாதீனதன்மையும் இல்லாத அறிக்கை என்பது நாட்டு மக்கள் அறிந்து விடயமே. முழு நாட்டு மக்களும், இந்த விடயம் குறித்து புரிந்து கொண்டமையானது ஜனாதிபதிக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர், அதிருப்தியும் எதிர்ப்புகளும் எழுந்து வந்தன. இதனால் சுயாதீன குழு என்ற தோல்வியான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தாம் விரும்பமின்றி இருந்ததாக ஜனாதிபதி கூறியுள்ளார். இது மிகவும் அருவருக்கதக்க கருத்தாக நாம் கருதுகிறோம். பௌத்த மத தலைவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பபெறுமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும் எதுவும் காதில் விழாதவர் போல் ஜனாதிபதி இருந்தார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முற்றாக ராஜபக்ஷ குடும்பத்தினரின் நாடகம் என நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம். இஸட் புள்ளிகள் மற்றும் திவிநெகும சட்டம் மூலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் காரணமாக ஆத்திரமடைந்துள்ள ராஜபக்ஷ குடும்பத்தினர் பிரதம நீதியரசரை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment