நீதிமன்ற அதிகாரத்தை பாராளுமன்றம் பயன்படுத்தியுள்ளது - நீதியரசர் காமினி அமரதுங்க
இலங்கையில் தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ததன்மூலம், அரசியல் யாப்பின் கீழ் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நாடாளுமன்றத் தெரிவுக்குழு பயன்படுத்திக் கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
தலைமை நீதியரசர் மீது கொண்டுவரப்பட்டுள்ள கண்டனத் தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, நீதியரசர் காமினி அமரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.
குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் அதிகாரம் இலங்கை அரசியல் யாப்பின் படி நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீதிமன்ற அதிகாரம் இல்லாத நாடாளுமன்றத் தெரிவுக்குழு தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ததன்மூலம் அரசியல் யாப்பை மீறியுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரசு சார்பில் கருத்துத் தெரிவித்த சட்டமா அதிபர் உச்சநீதிமன்ற நீதியரசர்களை சாதாரண மக்களைப் போல் கருதமுடியாது என்பதாலேயே தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரித்ததாக கூறினார்.
இதன்போது கேள்வியெழுப்பிய நீதியரசர் காமினி அமரதுங்க, நாட்டின் பொதுச்சட்டமாக அங்கீகரிக்கப்படாத நாடாளுமன்றக் கட்டளைகளைப் பயன்படுத்தி நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வது சட்டரீதியானதா என்று வினவினார்.
அரசியல் யாப்பின்படி தமக்குள்ள அதிகார எல்லைக்குள் நின்றுகொண்டு மட்டுமே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால் செயற்படமுடியும் என்று சுட்டிக்காட்டிய நீதியரசர் காமினி அமரதுங்க, அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு பொருள் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.
நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் வழக்கு விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இறுதியாக இந்த வழக்கின் இரகசிய தீர்ப்பு அடுத்துவரும் நாட்களில் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படவுள்ளது.

Post a Comment