இலங்கையில் வருடாந்தம் 36 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு - 25 ஆயிரம் கருக்கள் சிதைப்பு
இலங்கையில் வருடாந்தம் 36 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அதேவேளை 25 ஆயிரம் கருக்கள் சிதைக்கப்படுகின்றன. யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்திய அதிகாரி திருமதி எஸ். திருமகள் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று யாழ். கலைத்தூது கலையகத்தில் அரச மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான குழுக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பெண்கள் உரிமைகள் எனும் தலைப்பில் கருத்துரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்துரை நிகழ்த்தும் போது தெரிவித்ததாவது:
பெண்களின் உரிமைகள், கலாசாரம் மற்றும் குடும்பச் சூழல்களால் மீறப்படுகின்றன. குறிப்பாக கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்படுகின்ற பெண்ணின் உரிமை குடும்பத்தால் மீறப்படுகிறது.
இதனைவிட மதுபோதையில் ஒரு ஆண் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் போது பெண்ணின் உரிமை, பொருளாதாரம் பாதிப்படைகிறது. குடும்பப் பெண்ணின் உளம் பாதிப்படையும் போது அவர்களது பிள்ளைகளின் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.
பெண்களின் உரிமைகள் சரியாக வெளிப்படுத்த முடியாமல் இருப்பது பிள்ளைகளின் உளத்தையும் பாதிப்படையச் செய்கிறது. போர்க் காலச் சூழலில் வன்னிப்பகுதியில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் திருமணம் முடித்து கணவனைப் பறிகொடுத்தும் அதற்கான மரணச் சான்றிதழ் பெற முடியாமல் கணவனின் சொத்துரிமைகளைக் கூட சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட முடியாமல் முடக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாக உள்ளனர் என்று தகவல் கூறுகின்றன.
இதனால் பெண்களுக்கான பாதுகாப்பு, உணவு போன்ற அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு முக்கிய தேவையான கணவனின் மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதே தற்போதைய தேவையாக உள்ளது. எனவே அதனைப் பெற்றுக் கொடுத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்றார்.

Post a Comment