தமிழர் முதலமைச்சராக நியமிக்கப்படாமைக்கு சம்பந்தனே காரணம் - பஸில்
கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் அமைச்சராக நியமனம் பெறாமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே காரணம். அதற்கான முழுப்பொறுப்பையும் அவர்தான் ஏற்கவேண்டும். கிழக்குத் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது அதனால்தான் என்று பொருளாதார அபிவருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அமைச்சரவையில் தமிழர் ஒருவர்கூட இல்லாதமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
கிழக்கு மாகாணத்துக்காகத் தமிழர் ஒருவரையே முதலமைச்சராக நியமித்தவர்கள் நாங்கள். இப்போது தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படாமைக்கு நாங்கள் காரணமல்ல. தேர்தல் காலங்களில் முழுக்க முழுக்க இனவாதம் பேசி செயற்பட்டார் சம்பந்தன்.
தமிழர் ஒருவர்கூட ஆளுங்கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டுவிடக்கூடாதென்று அவர் கூறினார். இப்போது தமிழர்களுக்குச் சேவை செய்யப்போவது யார்? தேர்தல் காலத்தில்போன்று நேரடியாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்பாரா அவர். தமிழ் அமைச்சர் ஒருவர் இல்லாவிட்டாலும், கிழக்கில் தமிழர்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்த்துவைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கிறார். நாங்கள் சம்பந்தன் போல் இனவாதம் பேசி மக்களைப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை என்றார்.

Post a Comment