Header Ads



அமானிதத்தை இறுதி வரை பேணி நடவுங்கள் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு கடிதம்


கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள “திவிநெகும” சட்டமூலத்தை அங்கீகரிப்பது தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களுக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தது.

அத்துடன் அது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் மூலமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை,
திருகோணமலை.

அஸ்ஸலாமு அலைக்கும்

‘திவிநெகும’ சட்ட மூலத்தை கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரிப்பது தொடர்பாக…

‘திவிநெகும’ சட்ட மூலமானது, மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்காகக் கொண்டுவரப்படவுள்ளதென்பது நாம் எல்லோரும் அறிந்த விடயமே. இந்தச் சட்ட மூலமானது மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் பலவீனப்படுத்தத்தக்க வகையில் பல அம்சங்களைக் கொண்டிருப்பது தங்களுக்குத் தெரியும்.

அத்தோடு பல பில்லியன் ரூபாய் பொது நிதியினைக் கையாளக்கூடிய வகையில் அமைக்கப்படவிருக்கும் ‘திவிநெகும திணைக்களம்’ அமைப்பதற்கு கொண்டுவரப்படவுள்ள இச்சட்ட மூலமானது பாரிய நிதித் துஷ்பிரயோகங்களும், மோசடிகளும் இடம்பெறுவதற்கு ஏதுவானதும், நல்லாட்சியின் அடிப்படை அம்சங்களுக்கு விரோதமானதுமான அம்சங்களைக் கொண்டிருப்பதுவும் நாம் எல்லோரும் ஏற்கனவே அறிந்திருக்கும் விடயங்களாகும்.

கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக மிகவிரைவில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்தச் சட்ட மூலம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் என்கிற பதவி அமானிதத்தைச் சுமந்துள்ள நீங்கள் நம் நாட்டினதும், நமது மக்களினதும் நலன்களை முதன்மைப்படுத்துகின்ற வகையில் இச்சட்ட மூலம் தொடர்பாகத் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த வகையில் இச்சட்ட மூலத்தை அங்கீகரிப்பதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது எனவும் எமது இயக்கத்தின் சார்பாக இறைவனின் பெயரால் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பாரிய நம்பிக்கைகளோடு மக்கள் அளித்த வாக்குகள் மூலமாக அமையப்பெற்றுள்ள இம்மாகாண சபையில் மக்களின் நலன்களுக்கு எதிரான சட்ட மூலமொன்று நிறைவேற்றப்படுவதற்கு தாங்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டீர்கள் என பெரும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம்.

நம் எல்லோரையும் சத்தியத்தின் பாதையில் இறைவன் இறுதிவரை நிலைத்திருக்கச் செய்வானாக! பதவி எனும் அமானிதத்தை இறுதி வரை பேணி நடக்கின்ற துணிவையும், நேர்வழியையும் இறைவன் வழங்குவானாக!!

இவ்வண்ணம்

பொதுச் செயலாளர்,
சூறா சபை,
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்,
காத்தான்குடி.

No comments

Powered by Blogger.