பங்களாதேஷில் பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் - இஸ்லாத்திற்கு விரோதமானது
சித்தீக் காரியப்பர்
பங்களாதேஷில் பௌத்த விகாரைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என்றும் அது இஸ்லாத்துக்கு விரோதமான செயற்பாடு எனவும் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்ஸஜல் ஒப் சிறிலங்காவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வார இறுதியில் பங்களாதேஷில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக கூட்டம் முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் அல்ஹாஜ் என். எம் அமீன் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தைக் கண்டித்து அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவும் முஸ்லிம் கவுன்சிலும் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகம்மத் கூபி ரஹ்மானுக்கு கையளித்த கடிதம் பற்றி விளக்கின. இலங்கை முஸ்லிம்கள் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்றும் ஆப்கானிஸ்தானில் பாமிய பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்ட போதும் சிங்கள சகோதரர்களுடன் இணைந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தாகவும் இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் அல்ஹாஜ் என். எம் அமீன் தெரிவித்தார்.
அழகான பங்களாதேசத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்துக் கவலை தெரிவித்த அவர், பங்களாதேஷில் வாழும் சிறுபன்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நேச நாடான இலங்கையில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துமாதலால் பங்களாதேஷில் வாழும் சிறுபான்மை பௌத்த சகோதரர்களுக்குப் போதிய பாதுகாப்பும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பங்களாதேஷ் அரசாங்கம் இந்தக் குழப்பத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உடன் நடவடிக்கை எடுத்தமை குறித்து முஸ்லிம் கவுன்ஸில் பாராட்டும் தெரிவித்துள்ளது.
இம்மகாநாட்டில் உரையாற்றிய அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதிநிதி மௌலவி நா ஆமி அர்கம், இஸ்லாம் இவ்வாறான செயல்களை ஒருபோதும் அனுமதிப்பதில்லை சில தீயசக்திகள் எம்மைப் பிரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் ஊடகங்கள் இவ்வாறான விடயங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எஸ். தாஸிம் மற்றும் மௌலவி பரூத், முஸ்லிம் கவுன்சிலின் செயற்குழு அங்கத்தவர் எம். எச்.எம். நியாஸ், முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர் அஸ்கர்கான், அகில இலங்கை வை.எம்.எம். ஏ தலைவர் டீன் பிரபோதய தலைவர் எம்.எச்.எம் ஹசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Post a Comment