அமிர் அலியை எம்.பி. ஆக்குவோம் - பள்ளிவாசலில் வைத்து உறுதி கூறினார் பசில் ராஜபக்ஸ
(அனா)
நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அமீர் அலிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மிக விரைவில் வழங்கப்படுவது உறுதி என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று (16.10.2012) ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுடனான கலந்துரையாடல் மௌலவி எம்.ஏ.சி.எம்.ஜூனைட் தலைமையில் இடம் பெற்ற போது அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் 19 ஆசனங்களைப் பெற்று இருந்தால் இன்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை அலங்கரித்திருப்பது இன்று இருக்கும் முதலமைச்சர் அல்ல கல்குடாத் தொகுதி பிரதிநிதி அமீர் அலிதான் என்பதற்கு மாற்றுக் கருத்திற்கிடமில்லை.
அமீர் அலியும் கல்குடாத் தொகுதி மக்களும் இந்த அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மிக விரைவில் அமீர் அலிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதுடன் அக் கொண்டாட்டத்தை இப் பாள்ளிவாயலில் கொண்டாடும் போது அதில் நானும் கலந்து கொள்வேன்.
இனவாதம் மதவாதம் பேசி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சிலர் நினைத்த போது அமீர் அலி தலைமையிலான இப் பகுதி மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தல், மாகாகாண சபைத் தேர்தல், பிரதேச சபைத் தேர்தல்களில் எல்லாம் எமது கட்சி வெற்றி பெற முன்னின்று உழைத்த அமீர் அலிக்கு நானும் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி அவரையும் இப் பிரதேச மக்களையும் கௌரவப் படுத்துவோம் என்றும் கூறினார்.
இக் கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் ஓட்டமாவடி வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.








Post a Comment