எகிப்தில் பெண் பாலுறுப்பு சிதைவுக்கு சட்ட அங்கீகாரம்? - பெண்கள் எதிர்ப்பு
TN
எகிப்தின் புதிய அரசியலமைப்பு வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில பரிந்துரைகள் கசிந்த நிலையில் பெண் உரிமையாளர்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எகிப்து பாராளுமன்றத்தின் மேல் அவைக்கு வெளியே ஆண்கள், பெண்கள் என 200 பேரளவில் கூடி அரசியல் அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“சட்டவாக்க குழுவில் பெண்கள் குரல் எழுப்பப்படவில்லை” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். மக்கள் எழுச்சியின் மூலம் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசு கவிழ்க்கப்பட்டதன் பின் அங்கு புதிய அரசியல் அமைப்பு வரையப்பட்டு வருகிறது. இதில் அரசியல் அமைப்புக்கான சட்டவாக்க குழுவில் இஸ்லாமியவாதிகள் அதிகம் இருப்பதாக மதச்சார்பற்றோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய அரசியல் அமைப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 36 ஆவது சரத்தின் சில விபரங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன. இதில் திருமணம் முடிக்க அனுமதிக்கப்படும் ஆகக் குறைந்த வயது 18 ஆக பரிந்துரைக்கப் பட்டிருப்பதோடு பெண் பாலுறுப்பு சிதைவுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கவும் கோரப்பட்டுள்ளது.
அதேபோன்று பெண்களின் கல்வி மற்றும் தொழில்புரியும் உரிமை குறித்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என பெண் உரிமை ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். நீதிபதி ஹொஸ்ஸம் அல் அறியன்ட் தலைமையிலான புதிய அரசியல் அமைப்புக்கான 100 பேர் கொண்ட சட்ட வாக்க குழு கடந்த ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்டது.

Post a Comment