வடக்கு மக்களின் கருத்தை வடக்கு ஆளுநர் பிரதிபலிக்கவில்லை - நீதிமன்றத்தில் மனு
TM
'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் கருத்து எது என்பதை வடக்கு மாகாண ஆளுநர் பிதிபலிக்க முடியாது. எனவே அவ்வாறு வடக்கு மாகாண சபையின் சார்பில் ஆளுநர் கருத்து வெளியிடமுடியாது என உத்தரவிடுங்கள் - இவ்வாறு கோரும் 'ரிட்' மனு ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை எஸ்.சேனாதிராஜா.
இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது மனுதாரர் சார்பில் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி வாதாடவிருக்கின்றார்.
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இந்த மனுவில் எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மாவை சேனாதிராஜா சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் சாராம்சம் வருமாறு:-
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மனுதாரர் தமது சார்பிலும், வடக்கு மாகாண மக்களுக்கு 13ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாத்து உறுதிப்படுத்தும் நோக்குடனும் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்றார்.
எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்படும் வடக்கு மாகாண ஆளுநரானவர் வடக்கு மாகாண மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லர். எனவே, அவர் எந்தவகையிலும் வடக்கு மாகாண மக்களின் கருத்து நிலைப்பாட்டையோ, அபிலாஷைகளையோ, விருப்புக்களையோ பிரதிபலிப்பவராகக் கருதப்பட முடியாதவர். ஆவவே, வடக்கு மாகாண மக்களின் நியாயமான கருத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்துவதற்கான தகுதியோ திறமையோ உடையவராக அவரைக்கொள்ள முடியாது.
கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி 'திவிநெகும' சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டது.
இந்தச் சட்டமூலத்தை விசாரித்த உயர்நீதிமன்றம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் மாகாண சபைக்குரிய பட்டியலில் அடங்குபவை என்பதால் அச்சட்டமூலத்தை அரசமைப்பின் 154(எ)(3) ஆம் பிரிவின் கீழ் மாகாண சபைகளின் கருத்துக்கு ஜனாதிபதி சமர்ப்பிக்காத நிலையில் அது சட்டமாக முடியாது என உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை அடுத்து மேற்படி சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதாக மனுதாரருக்குத் தெரிய வந்தது.
இப்போது அந்தச் சட்டமூலம் நாட்டின் எட்டு மாகாண சபைகளுக்கும் அவற்றின் கருத்துக்களை அறிவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது என மனுதாரருக்கு நம்பகமாக அறியவந்துள்ளது.
இதேவேளை வடக்கு மாகாண சபையின் கருத்தை அறிவதற்காகவும் இச்சட்டமூலம் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்டிருப்பதாக மனுதாரருக்கு அறியக் கிடைத்துள்ளது.
இவ்விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தமது கருத்தை ஜனாதிபதிக்கு வெளிப்படுத்தியுள்ளார் அல்லது விரைவில் வெளிப்படுத்தவுள்ளார் என மனுதாரர் கருதுகிறார்.
அதேசமயம், இந்தச் சட்ட மூலத்தை ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி கருத்துக் கோருகின்றமை அவர் வடக்கு மாகாண ஆளுநர் என்ற வகையிலா அல்லது கலைக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கு என்ற விதத்திலா என்பது மனுதாரருக்குத் தெரியவில்லை.
ஒரு சட்டமூலம் தொடர்பில் மாகாண மக்களின் கருத்து நிலைப்பாடு இதுதான் என்பதை மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இல்லாத ஆளுநரால் பிரதிபலிக்கமுடியாது.
இதேசமயம், மாகாணசபை ஒன்றைக் கலைக்கும் அதிகாரம் உள்ள மாகாண ஆளுநரிடம் ஒரு சட்ட மூலம் தொடர்பில் மாகாண மக்களின் கருத்து நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் தகுதியும் உரிமையும் உள்ளது என்று கருதும் நிலைப்பாடு உருவாகுமானால் அது பல ஆபத்தான, விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடலாம்.
ஜனாதிபதியின் வழிகாட்டலில் செயற்படும் ஆளுநர் ஒருவருக்கு அத்தகைய தகுதியும் அதிகாரமும் இருக்குமானால் மாகாண சபைகளைக் கலைத்துவிட்டு, அரசமைப்பின் கீழ் மாகாண சபைப் பட்டியல் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பிடுங்கிக் கொள்ளும் எதேச்சாதிகார நிலைமை உருவாகும்.
அதாவது அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமைகள் விடயத்தில் சட்ட வாக்கத்துறையினால் மட்டுமே கையாளக்கூடிய நிலைமைக்கு மாறாக, நிறைவேற்று அதிகாரத்துறையே அதில் நேரடியாகத் தலையிட்டுக் கையாள்வதற்குரிய பாதுகாப்பை வழங்கி, அரண் அமைப்பதாக அது அமைந்துவிடும்.
எனவே, ஜனாதிபதியின் முகவராக ஒரு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர் அந்த மாகாண மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபையின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் தகைமை உடையவராகக் கருதப்படக்கூடாது. அப்படிக் கருதப்படுமானால் அது அரசமைப்பின் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட நோக்கத்தையே சிதறடித்துவிடும்.
எனவே - இம்மனு தொடர்பில் எதிர் மனுதாரருக்கு அழைப்பாணை அனுப்பவும். மேற்படி சட்டமூலம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் சார்பில் கருத்து இதுதான் என்பதை எதிர்மனுதாரர் வெளிப்படுத்த முடியாது என இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை உடன் வழங்கவும்.
'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் கருத்தை வடக்கு மாகாண ஆளுநர் பிரதிபலிக்க முடியாது என நிரந்தரத் தடை உத்தரவு வழங்கவும் என மனுதாரார் கோருகின்றார்.

Very good move by people who have courrage.
ReplyDeleteWill SLMC follow this move in the EPC and rectify their historic treachery?