Header Ads



முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையான சொத்து ஜப்னா முஸ்லிம் இணையம் - என்.எம். அமீன்


“யாழ். முஸ்லிம் புளொக்ஸ்பொட்“டாக ஆரம்பித்து இன்று ‘ஜப்னா முஸ்லிம்“ (யாழ் முஸ்லிம்) ஆகப் பரிணமிக்கும் இணையத்திற்கு அகவை 2  ஆனதையிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். யாழ். முஸ்லிம் என்று தலைப்புதான் சுட்டினாலும் அதன் பணி இன்று நாடு தழுவி, நாடு கடந்து சர்வதேச பார்வையில் வியாபித்து நிற்கிறது. ஒரு தனிமனித முயற்சி இந்த 2 வருடங்களுக்குள் உச்சியைத் தொட்டு  நிற்பது பாராட்டுக்குரிய சாதனையே.

ஊடகத்துறையில் இணையம் என்பது இன்று ஒரு முக்கிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அச்சு தவிர்ந்த ஏனைய இலத்திரனியல் ஊடகங்களில் பெரும்பாலானவை போன்று இருபத்து நான்கு மணிநேர சேவையையும் வழங்க வேண்டிய காலத்தின் கட்டாயத்துக்கு இன்று இணைய ஊடக சேவையும் தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் ‘ஜப்னா முஸ்லிம்“ இணையமும் சளைக்காத தன்மையைக் கொண்டுள்ளது. 

முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு செவிவழிச் செய்தியை நாம் கேள்வியுற்றவுடன் அது உண்மையா? அது என்ன செய்தி என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்கு இந்த இணையத்தை நாம் திறந்தால் போதும். அங்கு எமது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுகிறது. “ஜப்னா முஸ்லிம் பார்த்தீங்களா? கொஞ்சம் பாருங்களேன்... அதில் இப்படி ஒரு நியுஸ் உள்ளது” என்று அனைவரும் சொல்லக் கூடியதான, பேசக் கூடியதான நிலையை அது இன்று அடைந்துள்ளமையையிட்டு முஸ்லிம் என்ற வகையிலும் ஊடகவியலாளர் என்ற ரீதியிலும் மகிழ்ச்சியடைகிறேன். 

இந்த இணையத்தின் ஆசிரியரான சகோதரர் அன்ஸிர் சுறுப்பாக இயங்கிச் செய்திகளைப் பதிவேற்றிக் கொண்டிருக்கும் துடிப்புமிக்க இளைஞராவார். விசாலமான செய்தித் தேடலைக் கொண்ட அவருடைய சளைக்காத தன்மையையும் பாராட்டவேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டியக்கப்பட்டு 22 வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலையில், ‘ஜப்னா முஸ்லிம்“ இணையம் தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஆனால், அதன் பணியை ஒப்பிடும் போது அதற்கும் 22 ஆண்டுகள் நிறைவுற்றது போன்ற ஒரு திருப்தி நிலையே காணப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் இதன் பணியும் வீச்சுமே ஆகும். அதுவும் புலம்பெயர்ந்து சென்று இந்தப் பணியை மேற்கொள்வது என்பது அசூர சாதனையாகவே கருதப்பட வேண்டும். 

இலங்கையில் மட்டுமல்ல,  சர்வதேசத்திலும் முஸ்லிம்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் அறியக் கூடிய ஒரு நம்பகத்தன்மை கொண்ட இணைய ஊடகமாக இந்த ‘ஜப்னா முஸ்லிம்“ பரிணமிக்கிறது. அதவாது முஸ்லிம்களின் நம்பிக்கையான சொத்தாக இந்த இணைய ஊடகம் கொள்ளப்படுகிறது. அத்துடன் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி இன்று புடம்போட்ட தங்கமாகவே ‘ஜப்னா முஸ்லிம்“ ஜொலிக்கிறது.

இந்த விடயத்தில் நான் ஒன்றைக் கூற வேண்டியுள்ளது. ஒரு தனிமனிதனாக நின்று சமவெளியாக ஆரம்பித்து இன்று உச்சியைத் தொட்டுள்ள இந்த இணையத்தின் வளர்ச்சிக்கு நாம் எமது பங்களிப்பினையும் வழங்க வேண்டிய தேவை  உணரப்பட்டுள்ளது. அந்தப் பங்களிப்பானது பேருதவியாக அமைய வேண்டுமென எமது முஸ்லிம் தனவந்தர்களிடம் நான் தனிபட்ட முறையில்  கோரிக்கை விடுக்கிறேன்.

தினக்குரல் பத்திரிகையில் ஊடகப் பணியை ஆரம்பித்த யாழ் முஸ்லிம் இணைய ஆசிரியரின் தூய பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்



என்.எம். அமீன் (பீ.ஏ.)

தலைவர் - சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில்

பிரதம ஆசிரியர் நவமணி,

தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்





No comments

Powered by Blogger.