இந்தியாவை கைகழுவி விடுங்கள் - அரசாங்கத்தை வலியுறுத்தும் தேசப்பற்றுள்ள இயக்கம்
"டெசோ'மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்வதன் பின்னணியில் இந்திய மத்திய அரசே இரகசியமாகச் செயற்பட்டு வருகின்றது. இந்த உண்மையைக் காலப் போக்கில் இலங்கை அரசு உணர்ந்துகொள்ளும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சூழ்ச்சிகளை முன்னெடுக்கும் இந்தியாவை இலங்கை உடன் கைகழுவ வேண்டும். இல்லையேல், நாட்டின் எதிர்காலம் சூனியமாகவே அமையும் என்றும் அந்த இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. எதிர்வரும் 06ஆம் திகதி ஐ.நாவிடம் கையளிக்க வுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறி யவை வருமாறு:
தமிழ் நாட்டுடனான உறவு இலங்கைக்கு மிகவும் அவசியம் என நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதை நாம் நிராகரிக்கின்றோம். தமிழகம் என்பது ஒரு நாடு அல்ல. எனவே, அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.
இன்று இந்திய மத்திய அரசு தமிழகத்தைக் காரணங்காட்டி எமது நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றது. இந்தியாவின் சூழ்ச்சியை அரசு தெரிந்து கொள்ள வேண்டும். "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐ.நாவுக்குச் செல்வதன் பின்னணியிலும் இந்திய மத்திய அரசுதான் இரகசியமாகச் செயற்பட்டு வருகின்றது. தி.மு.கவின் பெயரில் அல்ல. இந்தியா என்ற பெயரில்தான் அந்தத் தீர்மானங்கள் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Post a Comment