மாகாணங்களுக்கு அதிகாரம் வேண்டாம் - சிங்கள கடும்போக்கு கட்சிகள் கூட்டாக எதிர்ப்பு
நாடாளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ஒழிப்பதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும், ஜாதிக ஹெல உறுமயவுமே முதலில் 13வது திருத்தத்துக்கு எதிரான பரப்புரைகளைத் தொடக்கி வைத்தன. தற்போது அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளது.
மாகாணசபைகள் பயனற்றவை. பொதுமக்களின் பணத்தை விரயம் செய்பவை. இப்போதாவது நாம் இதிலிருந்து விலக வேண்டும். ஒரு நாட்டில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் மிகவும் முக்கியமானவை. அவற்றை மத்திய அரசே கையாள வேண்டும். இந்த அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்கியதால், ஏற்பட்டுள்ள விளைவுகளை நாம் அனுபவிக்கிறோம்.
இது தொடர்பாக எமது கட்சி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளது. இதுபற்றி பலமுறை அரசுக்கு எழுதி விட்டோம். மீண்டும் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கவுள்ளோம். அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. அதனை, 13வது திருத்தத்தை ஒழிப்பதற்குப் பயன்படுத்த முடியும்,
மாகாணசபைகளுக்குப் பதிலாக உள்ளூராட்சிசபைகளைப் பலப்படுத்த வேண்டும்.” என்றும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
ஏற்கனவே அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment