முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கொம்பனித்தெருவை இந்தியாவுக்கு விற்க தற்காலிக தடை
bbc
கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அப்பகுதியில் உள்ள சுமார் 7 ஏக்கர் பரப்புள்ள காணியை இந்தியாவின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தற்காலிகமாக இடைநிறுத்தி இலங்கை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொம்பனித்தெரு மக்கள் சிலர் தாக்கல்செய்திருந்த மனுவை பரிசீலித்த பின்னரே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவுள்ள இந்தக் காணிகளில் வசிக்கும் மக்களிடம் அதற்கான காணி உறுதிப்பத்திரங்கள் இருப்பதாக, அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
குறித்த பகுதியில் அபிவிருத்தி செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் அந்தக் காணிகளை இந்தியாவின் டாட்டா நிறுவனத்திடம் வழங்கவுள்ளதாக கூறுகிறது.
ஆனால் அந்த நடவடிக்கை மூலம் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 600-க்கும் அதிகமான குடியிருப்புகள் இடிக்கப்படும் என்றும் அதனால் 1000-க்கும் அதிகமான குடும்பங்கள் நிர்க்கதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
எனினும், குறித்த பகுதியில் வீடுகளை இழக்கும் மக்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளை வழங்க நகர அபிவிருத்தி அதிகாரசபை இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆனால் அரசாங்கம் குறித்த மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான உறுதியான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கும்வரை அங்குள்ள காணிகளை சுவீகரிப்பதை நிறுத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவிட்டதாக சட்டத்தரணி சேனசிங்க மேலும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 25-ம் திகதி நடக்கவுள்ளன.

ஒரு பேச் காணியின் விலை 95 இலட்சம் 7 ஏக்கரின் விலையை கணக்கு பார்த்துக்கொள்ளுங்கள்.இதே மாதிரி வெள்ளவத்தையிலும் எத்தனை ஏக்கர் என்று தெரியவில்லை,மிக,மிக பெருந்தொகைக்கு விலை பேசியிருக்கிறார்கள்.நுற்றுக்கணக்கான தமிழ்,முஸ்லிம்,4 /5 சிங்கள குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரப்போகிறது.
ReplyDeleteஎத்தனை மாடி வீடாக இருந்தாலும் 500 சதுர அடி தான் .அதுவும் அவிசாவளையில் என்று கதையும் இருக்கிறது.