Header Ads



பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாட முயலாதீர்கள் - ஜம்இய்யத்துல் உலமா அறிவிப்பு!


இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஏதாவது ஒரு நாடு வெற்றி பெறலாம், ஆனால் வெற்றியின் பின்னர் நமது நாட்டின் ஜக்கியத்திற்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சகலரும் நடந்து கொள்ளவேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அன்பாக வேண்டிக் கொண்டுள்ளது.

மேலும் அவ்வூடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,

இப்போட்டி இலங்கை அணி வெற்றி பெரும் பட்சத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கோ, அந்நாட்டில் வாழும் பெரும்பான்மையினராக இருக்கும் முஸ்லிம்களுக்கோ, இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கோ, பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களையோ, நடவடிக்கைகளையோ, தடுப்பது இலங்கையிலுள்ள பெரும்பான்மையினத்தைச் சோ்ந்த ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

அதேபோல் பாகிஸ்தான் அணி வெற்றி பெரும் பட்சத்தில் அதனை ஒரு இனத்திற்கோ, சமயத்திற்கோ கிடைத்த வெற்றியாக கருத முடியாது. எனவே பாகிஸ்தானிய வெற்றியை கொண்டாட முயலக்கூடாது. அது பெரும்பான்மையினரது மனங்களை நிச்சயமாக புண்படுத்தும் என்பதனை மறந்து விடலாகாது.

அதேவேளை இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை அணிக்கே தமது பூரண ஆதரவை வழங்குகிறார்கள் என்பதனையும் பெரும்பான்மையினர் கருத்திற்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒரு சிலரது தூர நோக்கில்லாதவர்களின் செயற்பாடுகளை வைத்து அதுதான் முழு முஸ்லிம் சமூகத்தினதும் கருத்து என்ற முடிவுக்கு வருவது நல்லதல்ல.

சர்வதேச விளையாட்டுக்களின் மூலம் உடல் பயிற்சிக்கான வாய்ப்புக்கள் கிட்டுவதுடன் நாடுகளுக்கிடையிலான உறவுகளும் பலப்படுகின்றன. விளையாட்டுக்கள் என்பவை ஓய்வு நேரத்தை குதூகலமாகவும் மனதுக்கு இதமாகவும் கழிப்பதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன.

இந்த எல்லைகளை தாண்டி பரஸ்பற வெறுப்பையும் இன முறுகல்களையும் தோற்றுவிக்கும் ஊடகங்களாக அவற்றை நாம் மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனமானதல்ல. சிறியவற்றை பெரிது படுத்தாமலும் பிறரது மன உணர்வுகளை புரிந்து கொள்ளாமலும் யாரும் நடந்து கொள்ளவேண்டாம் என்றும் இன ஜக்கியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகள் அதிகமாக ஏற்படும் ஒரு சூழ் நிலையில் வாழும் நாம் மிகுந்த பொறுப்புணா்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

இது போன்ற உணர்வுபூர்வமான நிகழ்வுகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடைபெறுகின்றபோது உலமாக்கள் தமது குத்பாப் பிரசங்கங்களில் மற்றும் உரைகளிலும் திட்டமிட்டும் இன ஜக்கியத்தைய உண்டு பண்ணும் வகையிலும் அமைத்துக் கொள்ள வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

No comments

Powered by Blogger.