முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவே அரசாங்கத்திற்கு ஆதரவு - அமெரிக்காவில் ஹக்கீம்
ஊடகச் செயலாளர் நீதியமைச்சு
அரசியலமைப்புச் சட்ட திருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு உரியமுறையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதன் அவசியமும், இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவத்துவமும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் வாக்களிப்பில் மக்கள் ஆணையின் ஊடாக நன்கு வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரி;க்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றிய நீதியமைச்சர் ஹக்கீம், நியூயோர்க்கில் அமைந்துள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி திங்கள் கிழமை (01) காலையில் பிளேக்குடன் தனியாக நடத்திய கலந்துரையாடலின் போது இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸூம் பிளேக்குடன் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் ஹக்கீமுக்கும், உதவி ராஜாங்க செயலாளர் பிளேக்கிற்கும் இடையிலான கலந்துரையாடல் அதிகாரப் பகிர்வின் அவசியம், கிழக்கு மாகாணத்தின் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய அமெரிக்கத் திரைப்படம் என்பனவற்றை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது.
மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்தவுடனேயே தாம் அரசாங்கத் தரப்பினருடனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடனும், முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்த பேரம்பேசும் சக்தியினூடாக நடாத்திய பேச்சுவார்த்தைகளின் போது நாட்டில் வாழும் சகல சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசாங்கமொன்றின் அவசியத்தை வலுயுறுத்திய போதிலும் இருதரப்பினரும் அதில் உரிய கவனம் செலுத்தவில்லையென்றும், அந்த பின்னணியில் தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை பொதுவாக நாட்டினதும், குறிப்பாக தமது சமூகத்தினதும் நலன் கருதி கிழக்கு மாகாண சபை ஆட்சியை நிறுவுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
இனப் பிரச்சினை தீர்வுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உள்வாங்குவதன் ஊடாக இதுவரை காலமும் தீர்வு காணப்படாத பல்வேறு அம்சங்கள் மீது உரிய கவனத்தைச் செலுத்தக்கூடியதாக இருக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்புவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், இனிமேல் நடைபெறும் இனப்பிரச்சினையோடு தொடர்பான எத்தகைய பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம் தரப்பும் தனியாக பங்குபற்ற வழிவகுக்கப்பட வேண்டுமென்றும், விடுதலைப்புலிகளைப்போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குபற்றுவதற்கு இணங்காதிருப்பதாகவும், கூட்டமைப்பினர் தாம் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாமென்றும், முஸ்லிம்கள் தம்மோடு பிரச்சினைகள் குறித்து கதைக்கலாமென்றும் கூறிவருவதாகவும் அது நன்மைபயக்கவோ, பலனளிக்கவோ மாட்டாதென்றும் சொன்னார்.
மீள்குடியேற்றம்
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தின் போது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றியும், அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார, பாதுகாப்பு விடயங்கள் பற்றியும் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஹக்கீம் எடுத்துரைத்தார். மன்னார் கோந்தபிட்டி விவகாரம் பூதாகாரமாக உருவெடுப்பதற்கு வழிகோலிய காரணிகளையும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கப்பட மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அவர் கூறினார்.
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் நிலபுலன்கள் தொடர்பான சிக்கல்களையும், நெருக்கடிகளையும் பற்றி தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், தமது சொந்தக் காணிகளை யத்தம் நிலவிய காலத்தில் பறிகொடுத்த மக்கள் அவற்றை மீண்டும் பெறுவதற்கு வழிவகுக்கும் சட்டத்தை அமுலாக்கவிருப்பதாகவும் கூறினார்.
தடுப்புக் காவலில் உள்ள தமிழ் சிறைக்கைதிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேலும் தாமதமின்றி மேற்கொண்டு குற்றமற்றவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் நீதியமைச்சும், சட்ட மா அதிபர் திணைக்களமும் ஈடுபட்டு வருவதாகவும் திரு. பிளேக் தொடுத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் ஹக்கீம் கூறினார். பிரத்தியேகமான மேல் நீதிமன்றங்களினூடாக அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுமென்றார்.
நபிகள் நாயகம் அவமதிப்பு பற்றி...
அமெரிக்காவில், கலிபோர்ணியாவில் தயாரிக்கப்பட்ட நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் கீழ்தரமாக சித்திரிக்கும் திரைப்படம் உலகளாவிய முஸ்லிம் நாடுகளில் மக்களின் மனங்களை புண்படுத்தி, அவர்களை அதற்கெதிராக கிளர்ந்தெழச் செய்துள்ளது பற்றி உதவி ராஜாங்க செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்த அமைச்சர் ஹக்கீம், இஸ்லாத்தைப் பற்றியும், அதன் இறுதித் திருத்தூதர் பற்றியும் வேண்டுமென்றே திட்டமிட்டு இவ்வாறான அபாண்டங்களும் அவதூறுகளும் மேற்கத்தேய நாடுகளைச் சேர்ந்தவர்களால் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், இவ்வாறான இழி செயல்களை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசாங்கமும், ஏனைய மேற்கு நாடுகளும் தாமதமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை மிகவும் பாரதூரமானதாகி விடுமென்றும் கூறியதோடு, பேச்சு சுதந்திரம் என்ற காரணத்தைக் காட்டி எந்தவொரு சமயத்தையோ, சமயத்தலைவரையோ நிந்திப்பதையோ, அவமதிப்பதையோ அச் சமயங்களை பின்பற்றுவோர் ஒரு போதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேற்குலகிற்கும், இஸ்லாமிய உலகிற்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்கான வழிவகைளை காண வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்த போது, அதற்கான சிறந்த ஆலோசனைகளை முன்வைக்குமாறும், அவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்த முடியுமென்றும் பிளேக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் ஹக்கீமுடன் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சர் டளஸ் அளகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன, பிரதி நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜென்ரல் சவீந்திர டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டினதும் தமது சமூகத்தினதும் நலன்கள் என்ன என்று சற்று விரிவாக கூறுங்களேன்.
ReplyDeleteராஜபக்சவினதும், சிங்கள பேரினவாதிகளினதும், குறிப்பாக உங்களினதும், உங்கள் அடிவருடிகளினதும் நலனுக்காகவே அரசாங்கத்துடன் இணைந்துள்ளிர்கள் என்று பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள் அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
நீங்கள் அமெரிக்காவில் அதிகார பகிர்வை பற்றி கூறிக்கொண்டிருக்கிறீர்கள் அனால் இங்கு உங்களது கட்சி திவிநெகும சட்டத்தை ஆதரித்து வாகளித்துள்ளது, நேர்மையனவர்களும் மாற்று மதத்தவரும் நீங்கள் (முஸ்லிம்கள்) இரட்டைவேடம் போடுவதாக கருதுவார்களே அதற்கு உங்கள் பதில் என்ன?
நீங்கள் பேரினவாதிகளுடன் தேநிலவுடன் இருந்துகொண்டு தமிழர் தரப்பை குறைகூறுவது நியாயமாகத் தெரியவில்லை.