Header Ads



நபியை அவமதித்த திரைப்படத்திற்கு அக்கரைப்பற்று மாநகர சபையில் கண்டனத் தீர்மானம்

2012.09.20ம் திகதிய அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த சபைக் கூட்ட அமர்வின் போது அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகி அவர்களினால் வாசித்து முன்மொழியப்பட்ட கண்டனத் தீர்மானம்

இலங்கையில் திரையிட தடைசெய்யுமாறு அரசை கோரல்
 
எமது உயிரிலும் மேலாக நாம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கின்ற எங்கள் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு காமுகர் ஆகவும் கொலைகாரராகவும்; சித்தரிக்கின்ற இஸ்லாத்தை அவதூறு செய்கின்ற வகையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள திரைப்படத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
 
இத்திரைப்படம் உலக முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியும் முஸ்லிம்களின் மத உரிமை சுதந்திரத்தை மீறியும் சர்வதேச ரீதியான மனித உரிமைப் பிரகடணங்களை மீறுவதாகவும் மத சகிப்புதன்மை அற்றதாகவும் அமைந்துள்ளது. இத்தகைய ஒரு திரைப்படத்தினை வெளியிடுவதற்கு அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு அனுமதி அளித்துள்ளது என்பது குறித்து நாம் ஆச்சரியம் அடைகின்றோம்.
 
அமெரிக்க பிரஜை ஒருவர் இத்தகைய திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டமை குறித்து இன்று அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும். சர்வதேச திரையரங்குகளிலிருந்து இத்திரைப்படம் அகற்றப்பட வேண்டும். மேற்கத்தேயே சமூகத்தைச் சார்ந்;தவர்கள் உலக முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் உலக முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் காழ்ப்புணர்வு கொண்டு இஸ்லாத்தையும் நபி (ஸல்) அவர்களையும் நிந்தித்து தூசித்து அவதூறுகளைப் பரப்பி உலகளவிலான இஸ்லாத்தின் எழுச்சியை தடை செய்ய, செய்யப்பட்டு வருகின்ற முயற்சிகள் இனிமேலும் தொடர்வதை சர்வதேச சமூகம் அனுமதிக்கக்கூடாது என நாம் சர்வதேச சமூகத்தை கோருகின்றோம்.
 
உலக முஸ்லிம்களின் மத நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துவதாக அமையும் இத்திரைப்படம் மனித சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்படும் பாரிய குற்றச் செயலாக கருதப்பட்டு இத்திரைப்படத்தை தயாரித்தவரும் இயக்குனரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என உலக முஸ்லிம்கள் சார்பில் அமெரிக்க அரசைக் கோருகிறோம்.    
 
பலஸ்தீன முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் மிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்ற முஸ்லிம்களின் உணர்வுகளை நன்கு புரிந்த நமது  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கையில் திரையிடுவதற்கும் இணைத்தளமூடாக தரவிறக்கம் செய்வதற்கும் வேறுவகையில் காட்சிப்படுத்துவதற்கும் சட்டரீதியாக தடைசெய்வதற்கும் நாம் இலங்கை அரசிடமும் ஜனாதிபதி அவர்களிடமும் கோருகிறோம்.
 
மேலும் இத்தீர்மானத்தினை இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் மற்றும் ஊடகத்துறை அமைச்சர், கலாசார அமைச்சர், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

No comments

Powered by Blogger.