Header Ads



அக்கறைப்பற்றில் மஹிந்த, அம்பாறையில் ஹக்கீம் - இறுதித் தேர்தல் பிரச்சாரங்கள்

 
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கு இன்னும் மூன்று தினங்களேயுள்ள நிலையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகின்றன.
 
புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலாகுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
 
இதன்படி 6 ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் 8 ஆம் திகதி வரைவில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது ஆதரவாளர்களோ ஏதேனும் வழிகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அவை தொடர்பாக துண்டுபிரசுரங்களையோ, அறிவித்தலையோ, விளம்பரங்களையோ முன்னெடுப்பது சட்டப்படி குற்றமாகும்.
 
அவ்வாறாக சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்க்கு எதிராக பாரபட்சமற்ற முறையில் வழக்கு தொடரப்படுமெனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் குறிப்பிட்டார். தேர்தல் களத்திலுள்ள பிரதான கட்சிகளும் சுயேட்சைகளும் அனல் பறக்கும் வகையில் தமது இறுதிச் சுற்று பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புதன்கிழமை  மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அக்கரைப்பற்றிலும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அம்பாறை மாவட்டத்திலும் இறுதித் தேர்தல் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளமை தெரிந்ததே.
 
இதேவேளை, மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை முன்னிட்டு 37 தேர்தல் தொகுதிகளிலும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் பொலிஸார் மற்றும் கண்காணிப்பாளர்களது பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப் பட்டிருப்பதனைக் காணக்கூடியதாகவுள்ளது.
 
இம்முறை தேர்தலில் கிழக்கு மாகாண சபையிலேயே அதிக போட்டி நிலவுவதனாலும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் கூடியளவில் பதிவாகியிருப் பதனாலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர். - TN

1 comment:

  1. அப்போ அக்கரைப்பற்றில் நடப்பது தேசிய காங்கிரஸின் தேசிய மாநாடு இல்லையா! ஓஹோ ஓஹோ.

    ReplyDelete

Powered by Blogger.