Header Ads



கிழக்கு மாகாணத்தில் இறுதி நேர தேர்தல் பிரச்சாரம் தீவிரம்

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் நாளை புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் கிழக்கு மாகாணத்தை முற்றுகையிட்டு தமது இறுதிக் கட்ட பிரச்சாரத்தை பெருமெடுப்பில் மேற்கொண்டு வருகின்றன.

மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் 08ம் திகதி நடைபெறவுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர்  மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கிழக்கு தேர்தல் களத்தில் த.தே.கூ, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற சூழலில் தமது முழுப்பலத்தையும் செலுத்தி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அதன் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசங்களில் பாரிய பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

முஸ்லிம் காங்கிரசும் தனது இறுதிப் பிரசார நடவடிக்கைகளை நாளை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் நாளை பொதுக் கூட்டங்களை நடத்துவாரென அக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாளையதினம் கல்முனை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் தமது இறுதிப் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்களும் கிழக்கு மாகாணத்தை மையமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், நாளை நள்ளிரவு 12 மணியுடன் பிரசார நடவடிக்கைகள் யாவும் முடிவடையவுள்ளன. தேர்தல் சட்ட விதி முறைகளை மீறி 6ம் 7ம் மற்றும் 8ம் திகதிகளில் கட்சி சார்பிலோ அல்லது வேட்பாளர் ஒருவர் சார்பிலோ பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.