Header Ads



கிழக்கு முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் - சம்பந்தன் திட்டவட்டம்

UN
 
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என நேற்றுத் திட்டவட்டமாக ஆணித்தரமாக இடித்துரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏற்பாட்டில் ஆலையடி வேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் தமதுரையில் மேலும் கூறியவை வருமாறு:

இன்றைக்கு தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினை சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. தேசியப் பிரச்சினை சம்பந்தமாக சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஊடாக சில தீர்மானங்கள் எடுத்துள்ளது. அந்தத் தீர்மானங்களை யடுத்து இலங்கை அரசு திணறிக்கொண்டிருக்கும் சூழலில் அதனை  முறியடிப்பதற்காக தமிழ் மக்கள் அரசுடன்தான் இருப்பதாக காட்டுவதற்காகத்தான் இலங்கை அரசு இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துகின்றது.

2010 இல் வடமாகாண தேர்தல் நடக்குமென 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகூறினார். பின்னர் 201 1 ஆம் ஆண்டு நடைபெறும் என்று 2010 ஆம் ஆண்டில் கூறினார். அதன் பின்னர் 2011 இல் நடைபெறும் என்று 2012 இல் கூறினார். தற்போது 2013 இல் நடைபெறும் என்று கூறுகின்றார்.

ஏன் முதல் கூறப்பட்ட ஆண்டுகளில் வடக்குத் தேர்தலை மஹிந்த அரசு வைக்கவில்லை? வடக்கு மாகாணத்தில் தமிழ்மக்கள் தனிப்பெரும்பான்மையாக வாழுகின்றனர், தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும், அது சர்வதேச சமூகத்துக்கு ஒருசெய்தியனுப்பும், அந்தச் செய்தி தமிழ்மக்கள் உரிமையை வழங்கும் என்று அவர்களுக்குத் நன்றாகத் தெரியும். அதனால் இவற்றை எல்லாம் முறியடிப்பதற்காக கிழக்கில் சிங்களமக்கள் குடியேற்றப்பட்டு இனவிகிதாசாரம் மாற்றப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருக்கின்றது என நினைத்து ஒருவருடம் இன்னும் கிழக்கு மாகாணசபை இருக்கும்போது அதனைக் கலைத்து தேர்தலை நடத்துகின்றது மஹிந்த அரசு.

ஆனால், முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைமைகளும் அரசு தமிழ்மக்களுக்கு செய்தவைகளை நினைத்து தாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக அரசுடன் சேர்ந்து போட்டியிடக்கூடாது என்ற காரணத்திற்காக முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என ஜனாதிபதி மஹிந்த எதிர்பார்க்கவில்லை.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பில் 8 ஆசனங்களையும், அம்பாறையில் 4 ஆசனங்களையும், திருகோணமலையில் 5 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும். அத்துடன் 2 போனஸ் ஆசனங்களையும் கூட்டமைப்புப் பெறும்.  எனவே, தமிழ்மக்கள் தமது ஒட்டுமொத்த வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையை தம்வசப்படுத்தி முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றும் என்றார்.

No comments

Powered by Blogger.