இனவாத தீயசக்திகளின் பயங்கரவாதங்கள் இன்னமும் அரசாங்கத்தினால் ஒழிக்கப்படவில்லை
உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் மீள்குடியேற்றக் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற முஸ்லிம் வயோதிப மாது மீதான கொடூரமிக்க கோடாரித் தாக்குதல் சம்பவம் மற்றும் அதனையடுத்து தீயசக்திகளால் அன்றைய தினம் பின்னிரவில் அங்கு மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல், பொதுமக்கள் குடியிருப்புக்கள் மற்றும் கடையொன்றின் மீதான தீவைப்புச் சம்பவங்கள் குறித்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது.
மேற்படி சம்பவங்களை காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தலைமையிலான அவ்வியக்கத்தின் சூறா சபை அங்கத்தவர்கள் குழு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பியுள்ள அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை இந்த அரசாங்கம் முறியடித்துள்ளதாகச் சொல்லப்பட்டு வருகின்ற போதிலும், இனவாத தீயசக்திகளின் பயங்கரவாதங்கள் இன்னமும் அரசாங்கத்தினால் ஒழிக்கப்படவில்லை என்பதையே இச்சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது பூர்வீக வசிப்பிடங்களுக்கு மீளக் குடியேற முயலும் முஸ்லிம் மக்களால் நிம்மதியாக வாழ முடியாத நிலை நீடிப்பதனையே இச்சம்பவம் உணர்த்துகிறது.
நாட்டின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகாணும் நடவடிக்கைகளிலும், போர்க்காலங்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றச் செயற்பாடுகளிலும் இழுத்தடிப்புக்களும், பாரபட்சங்களும் அரச நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் இதன் மூலம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இக்கிராமத்தில் முஸ்லிம்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்ற போதிலும், கடந்த 1985களில் தீவிரமடைந்த இனப்பிரச்சினை மற்றும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாகவே இங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது உடமைகள் அனைத்தையும் கைவிட்டு உடுத்த உடையுடன் காடுகளில் புகுந்து மறைந்திருந்து உயிர் தப்பி காத்தான்குடிக்கு அகதிகளாக வந்தடைந்தனர் என்பது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிகாரிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்கு தெரிந்த விடயமேயாகும்.
விடுதலைப் புலிகளுடனான முப்பதாண்டு கால யுத்தம் முடிவடைந்து அவர்களின் பயங்கரவாத செயற்பாடுகள் முற்றாக முறியடிக்கப்பட்டு விட்டதாக இந்த அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாகச் சொல்லி வருகின்ற போதிலும் அந்த யுத்த காலங்களில் இடம்பெற்ற இவ்வாறான இடப்பெயர்வுகள் குறித்து பாரபட்சமான அணுகுமுறைகளே கையாளப்பட்டு வருகின்றன.
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அகதிகள், பழைய அகதிகள் என்ற கோட்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வருவதைப் போலவே கிழக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் அக்கறையற்ற போக்கும் பாரபட்சங்கள் நிறைந்த செயற்பாடுகளும் நீடித்து வருகின்றன.
உன்னிச்சைப் பிரதேச இருநூறுவில் பாவற்கொடிச்சேனைக் கிராமத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறியுள்ள பிரதேசத்திற்கு இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை. வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவில்லை. போக்குவரத்துக்கான வசதிகள் இல்லை. பாதைகள், மதகுகள், குடிநீர் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறவில்லை. இவ்வாறான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் இம்முஸ்லிம் மீள்குடியேற்றக் கிராமத்திற்கு மிகக் கிட்டிய தூரத்தில் அமைந்துள்ள தமிழ்க் கிராமங்களில் தாராளமாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும், இதனடிப்படையில் இங்கு மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருவதனையும் நாம் தெளிவாக அவதானித்தோம்.
மேலும், இருநூறுவில் கிராமத்தில் அமைந்துள்ள பன்னெடும் பழமை வாய்ந்த முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மிகவும் பரிதாபரமான நிலையில் இருந்து வந்த போதிலும்கூட அதற்காக ஒதுக்கப்பட்ட அரச நிதி இப்பிரதேச அரச அதிகாரிகளால் இதுவரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் இக்கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுவும்கூட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரங்களில் காட்டப்பட்டு வரும் பாரபட்சங்களை நிரூபிப்பதாகவே அமைந்திருக்கின்றது.
இக்கிராமத்தில் தாங்கள் மீள்குடியேறிய பின்னர் பல தடவைகள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அதிகாரமுள்ளோர் பலர் வருகை தந்துள்ளதாகவும், அவர்களிடம் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்து தீர்வு பெற்றுத் தருமாறு கோரியதாகவும், அதன்போதெல்லாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்றுதான் அவர்களால் கூறப்பட்டு வருகின்றதே தவிர எவ்வித காத்திரமான நடவடிக்கைகளும் அக்கறையுடன் மேற்கொள்ளப்படுவதாக இல்லையென்றும் இங்குள்ள மக்கள் எம்மிடம் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதன் பின்னர் ஆளுந்தரப்பிலுள்ள அரசியல் அதிகாரமிக்க அரசியல்வாதிகள் சம்பவ இடங்களுக்கு ஓடோடிச் சென்று பார்வையிடுவதிலும், ஆறுதல் கூறுவதிலும், கண்டன அறிக்கைகள் விடுவதிலும், சில ஆயிரம் ரூபாய்களை இழப்பீடுகளாக வழங்கி ஆற்றுப்படுத்துவதிலும் எந்த விதமான அர்த்தங்களும், தீர்வுகளும் ஏற்பட்டு விடப்போவதில்லை.
மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் வீற்றிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறான மீள்குடியேற்றக் கிராமங்களிலும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் இடம்பெற்று வருகின்ற இழுத்தடிப்புக்கள், பாரபட்சங்கள், ஓரங்கட்டல்கள் போன்ற அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் பற்றி தைரியமாக வாய் திறக்க வேண்டும். அவர்கள் ஆதரவளிக்கின்ற அரசாங்கத்திற்கும், அரசுத் தலைவரின் கவனத்திற்கும் இவ்வாறான விடயங்களையே அவர்கள் முன்னுரிமைப்படுத்தி தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
வரலாற்று ரீதியாக முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களில் அவர்கள் தொடர்ந்து நிம்மதியாக வாழவும், விவசாயம், கால்நடை, மீன்பிடி போன்ற தொழில்களை அச்சுறுத்தல்களின்றி மேற்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான நிலைமைகள் உருவாகும்போதே பொதுமக்களின் உள்ளங்களிலும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லாதொழிந்து சுதந்திர உணர்வும், இனநல்லுறவும், தேசப்பற்றும் வியாபகமாகும்.
உன்னிச்சை இருநூறுவில் கோடாரித் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிபத் தாய் விரைவில் பூரண குணமடைய இப்புனித நாட்களில் நாம் பிரார்த்திக்றோம். அதேவேளை பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள், கடை உரிமையாளர் ஆகியோருடனும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கின்றது.
இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தி நீதி வழங்குவதில் நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், தொடர்ந்தும் இப்பிரதேசத்தில் அச்சமற்ற சூழலில் முஸ்லிம்களும், தமிழ் மக்களும் பரஸ்பர நம்பிக்கையுடனும், நல்லுறவுடனும் வாழ வேண்டும் என்றும் நாம் பிரார்த்திக்கின்றோம். - இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமின் நண்பர்களான தமிழர் விடுதலைக் கூட்டணி ஏன் இன்னும் மெளனமாக இருக்கின்றது?
ReplyDelete