Header Ads



''முஸ்லிம் சமூகம் கண்ணீர் வடிக்கின்ற நாளாந்தப் பிரச்சினைகளை நாம் நேரில் கண்டோம்''

ஒவ்வொரு கட்சிகளும் தமது கட்சிகளின் வெற்றிக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அக்கட்சிகளின் வேட்பாளர்கள் அவர்களின் தனிப்பட்ட வெற்றிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மாத்திரமே முழு முஸ்லிம் சமூகத்தினதும் வெற்றிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எம்மில் யாரும் எமது சொந்த வெற்றிகளுக்காகவோ அல்லது சொந்தமாகப் பதவிகளைப் பெறுவதற்காகவோ அரசியலில் முயற்சிக்கவில்லை. நாங்களும் நீங்களுமாக இந்த சமூகத்தின் வெற்றிக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். இறைவனின் உதவியுடன் நிச்சயமாக நாம் எல்லோரும் அதில் வெற்றிபெறுவோம் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் நம்பிக்கை தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஆண்களுக்கான திறந்த இப்தார் நிகழ்வு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள அதன் மக்கள் அரங்கில் நிடைபெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே பொறியியலாளர் அப்துர் றஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

ஆறாண்டு காலம் என்கிற குறுகிய காலப் பகுதியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயும், முஸ்லிம் அல்லாத பிற சமூகங்கத்தினர் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கின்ற இந்த மாற்றம் நமது சொந்த முயற்சியினால் கிடைத்திருக்கும் பிரதிபலிப்பல்ல. இறைவன் நமது முயற்சியை அங்கீகரித்து அவனது உதவியை நமக்கு நெருக்கமாக்கியிருப்பதன் பிரதிபலிப்பே குறுகிய காலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றமாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஆறாண்டு காலமாக காத்தான்குடி நகரத்திற்குள் மாத்திரம் பிரச்சாரப்படுத்தப்பட்டு வந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சமூக அரசியல் சிந்தனைகள் கடந்த ஆறு வாரங்களாக கிழக்கு மாகாணம் முழுவதும் இறைவனின் உதவியால் மிகத் தீவிரமாகப் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்திருந்த வேளையில் மே மாதம் 19ம் திகதி கொழும்பில் கூடிய நமது இயக்கத்தின் சூறா சபை, இம்மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு முகங்கொடுப்பது என விரிவாக ஆலோசித்தது. அதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலே கண்டிப்பாக நாம் களமிறங்க வேண்டும் எனத் தீர்மானித்ததோடு திருகோணமலை, திகாமடுல்ல மாவட்டங்களிலும் எமது இயக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்தத் தேர்தல் களத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

நமது இயக்கம் 2006ல் ஆரம்பிக்கப்பட்டதன் பின் 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும், 2010ம்ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் நாம் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்தோம். காத்தான்குடி மண்ணில் நமது நல்லாட்சிச் சிந்தனைக்கான ஒரு உறுதியான அடித்தளத்தை இட்ட பின்னரே நாம் ஏனைய பிரதேசங்களுக்கு இவ்வேலைத்திட்டத்தை விஸ்தரிக்க வேண்டும் எனவும் எண்ணியிருந்தோம்.

நமது இயக்கத்தின் சிந்தனைகளும், செயற்பாடுகளும் இலங்கை முஸ்லிம் சமூக அரசியலில் மாற்றமொன்றைக் கொண்டு வருவதற்கான நடைமுறைக்குச் சாத்தியமான வெற்றியளிக்கக்கூடிய விடயங்கள்தான் என்பதை இந்தக் காத்தான்குடி மண்ணிலே நாம் நிரூபித்து ஏனைய பிரதேசங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய வரை இவ்வாறு பொறுத்திருக்க வேண்டுமென நாம் காத்திருந்தோம்.

அந்த இலக்கை நோக்கிய காத்திருப்புக்காக நாம் மேற்கொண்டு வந்த இடைவிடாத உழைப்பின் பலனே இறைவன் அருளினால் கடந்த 2011ம் வருடம் நடைபெற்ற நகர சபைத் தேர்தலிலே நமது கால்களை இந்த மண்ணிலே பலமாக நிலையூன்றச் செய்தது. நமது நல்லாட்சிச் சிந்தனைகளையும், செற்பாடுகளையும், அதற்காக மக்கள் அளித்திருந்த வேகமான அங்கீகார ஆதரவுத் தளத்தினையும் நோக்கி அனைத்துக் கட்சியினரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கச் செய்தது.

2006ம் ஆண்டு இவ்வூரிலுள்ள பல முக்கிய பிரமுகர்களையும், முக்கிய அரசியல்வாதிகளையும் நாம் அழைத்து, 'மார்க்கத்தின் பெயரால் இரண்டு தசாப்தங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற சமூக விரோத அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைப்போம். முஸ்லிம் சமூக அரசியலென்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற முன்மாதிரியை இந்த மண்ணிலே நாம் தொடங்கி வைப்போம். அதற்கான தொடக்கப் புள்ளியாக அந்த வருடம் எதிர்நோக்கிய நகர சபைத் தேர்தலை நாம் பயன்படுத்துவோம்' என்ற அழைப்பை அவர்களிடம் விடுத்திருந்தோம்.

அவ்வாறு நாம் இஸ்லாமிய சமூக அரசியலொன்றுக்காக அழைப்பு விடுத்தபோது, 'நீங்கள் நினைப்பது போல் அரசியல் செய்ய முடியாது. அரசியல் என்றால் சுத்துமாத்து. அரசியலின் அடிப்படை பொய். அரசியலின் மூலதனம் சுயநலம். அரசியல் என்றாலே பிரதேசவாதம். அரசியல் என்றால் அத்தனை தில்லு முல்லுகளும் வன்முறைகளும், கள்ளவாக்களிப்பும்தான். இதையெல்லாம் செய்யாமல் அரசியல் செய்ய முடியாது' என்று அவர்கள் ஏளனமாகச் சொன்னது எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கின்றது.

என்றாலும் நாங்கள் சத்தியம், தர்மம், நீதி, உண்மை, வாய்மை, சகோதரத்துவம், மனிதாபிமானம், மனித நேயம் என்கின்ற இந்தப் பண்புகளைக் கொண்ட சமூக அரசியலை முஸ்லிம்களான நாங்கள் செய்ய முடியாதென்று சொன்னால் நாம் பின்பற்றுகின்ற இஸ்லாம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என ஏனைய சமூகங்களுக்கு நாங்களே சொல்வது போலாகிவிடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று அவர்களிடம் உறுதியாகச் சொன்னோம்.

இஸ்லாமும், அது காட்டியிருக்கின்ற வழிமுறைகளும் இந்த உலகம் அழிகின்ற வரையில் நமது சமூக அரசியல் பொருளாதாரம் என்கிற அத்தனை நடவடிக்கைகளுக்குமான  உயிரோட்டமுள்ள நேர்வழியாக இருக்குமென்றுதான் நாம் நம்பி இருப்பதாக அவர்களிடம் எடுத்துரைத்தோம்.

இவ்வாறான பலரது நம்பிக்கையீனங்களுக்கு மத்தியில் மிகுந்த இறைநம்பிக்கையோடு நாம் அன்று தொடங்கி வைத்த இந்த நல்லாட்சி அரசியல் இந்த ஆறாண்டுகளில் மிக வேகமாக வளர்ந்திருக்கின்றது. இந்த ஆறாண்டுகளில் நாம் தொடக்கி வைத்த இந்த நல்லாட்சி அரசியல் வேகமாக வளர்ச்சியடைய வேண்டுமென்பதற்காக நேர்மை தவறி நாம் ஒருபோதும் செயற்பட்டிருக்கவில்லை.

கடந்த 2010ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்மோடு பேச்சுவார்த்தை நடாத்திய முஸ்லிம் அரசியற்கட்சியொன்று அதன் தேசியப்பட்டியல் எம்.பி. பதவியொன்றை எமது இயக்கத்திற்கு இரண்டு வருடங்களுக்குத் தருவதாகவும், அக்கட்சியில் இணைந்து போட்டியிடுமாறும் கேட்டது. ஆனால் நாம் அதனை விரும்பவில்லை.

அதற்குக் காரணம், அக்கட்சி எமது நல்லாட்சிக் கொள்கையை ஏற்று அதன் வழியில் முஸ்லிம் சமூக அரசியலை முன்கொண்டு செல்வதற்கு விரும்பவில்லை. தேர்தலுக்கு மாத்திரமே எமது மக்களின் வாக்குகள் அக்கட்சிக்குத் தேவைப்பட்டன. அதற்குப் பிரதியுபகாரமாக எமக்கு இரண்டு வருடம் எம்.பி. பதவி தருவதற்கே அக்கட்சி எம்முடன் பேரம் பேசுகிறது என்பதை நாம் விளங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொண்டோம்.

இதுபோலவே இந்தக் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும் பல கட்சிகள் எங்களோடு பேசின. ஆளுந்தரப்பினர் அவர்களது அணியில் எம்மையும் சேர்ந்து போட்டியிடுமாறும், காத்தான்குடியில் எமது வேட்பாளரைத் தவிர வேறு எவரையும் தாம் நிறுத்த மாட்டோம் என்றும், அதனால் எமது இயக்கத்தின் வேட்பாளர் மிக இலகுவாக வெற்றி பெறலாம் என்றும் கூறியிருந்தார்கள்.

ஆனால் நாங்கள் அவர்களுக்குச் சொன்னோம். பதவிகளை மாத்திரம் குறியாக வைத்து எவ்வாறாயினும் நாம் வென்று விட வேண்டும் என்கிற வெறியிலே நாம் இந்த நல்லாட்சி வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவில்லை. நாம் ஒரு நேர்மையான வழிமுறையைக் கொண்டிருக்கிறோம். அந்த வழிமுறையினூடாகவே நாம் அதிகாரத்தைக் கோருகின்றோம். அதற்கமைய மக்கள் எமக்கு அளிக்கின்ற அந்த அமானிதத்தை நூறு வீதம் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் மக்களுக்காகப் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பம் எமக்கு இருக்க வேண்டும்.
உங்களோடு சேர்ந்து போட்டியிட்டால் எமக்கு பதவி கிடைக்கும். மாகாண சபைக்கு மிக இலகுவாகச் செல்லலாம். ஆனால் மக்களுக்காகப் பேசக்கூடிய சுதந்திரம் கிடைக்காது. மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரத்தை மக்களுக்காகப் பயன்படுத்த முடியாது. அரசாங்கத்திடமோ எனைய கட்சிகளிடமோ எமது மக்களின் வாக்காணை என்னும் அமானிதமான அரசியல் அதிகாரத்தை அடமானம் வைத்து விட்டு எமது சமூகத்திற்கான சுதந்திரமான குரலுக்கு கடிவாளம் இட்டுக் கொள்ள விரும்பவில்லை என்று அவர்களுக்குச் சொன்னோம்.

இந்த இடத்தில்தான் எமது இயக்கம் தேர்தல்களையும், அதனூடாகக் கிடைக்கின்ற அரசியல் அதிகாரங்களையும் எப்படிக் கையாள்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் பதவிகளை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு இந்த இயக்கத்தை நாம் முன்னெடுத்திருந்தால் இந்த சந்தர்ப்பம் ஒன்றே எங்களுக்குப் போதும். நாங்களும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டு இலகுவாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரசாங்கத்திலே அங்கத்தவர்களாக இருந்து கொண்டு எமது சமூகத்திற்காக சுதந்திரமாகக் குரல் கொடுக்க முடியாதென்பது எமது கடந்த கால அனுபவங்களாகும்.

கடந்த மாகாண சபையிலே பெரும்பான்மையான முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் சேர்ந்திருந்த போதிலும் அவர்களால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியிருந்த ஏதாவது ஒரு பிரச்சினையைத் தீர்த்து வைத்தததற்கான வரலாற்றை இவர்களால் காட்ட முடியுமா? ஒரு பிரச்சினையையும் இவர்கள் தீர்;த்ததாக வரலாறில்லை.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரையில் நாம் சென்றபோது முஸ்லிம் சமூகம் கண்ணீர் வடிக்கின்ற நாளாந்தப் பிரச்சினைகளை நாம் கண்டோம். முஸ்லிம் சமூகத்தின் மீதான மத ரீதியான அத்துமீறல், அடக்குமுறைகள் அண்மைக்காலமாக பரவலாகஇடம்பெற்று வருகின்றன. மாகாண சபையில் அரசாங்கத்திற்கு ஆதரவாக பெரும்பான்மையாக இருக்கும் இவர்களால் ஏதாவது செய்து அவற்றைத் தடுக்க முடிந்ததா?  என அவர் கேள்வி எழுப்பினார்.

எனவே எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதர் தடவையாகக் கால் பதித்து களமிறங்கியுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்த்தின் வெற்றிக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அனைவரும் தமது ஆதரவினை வழங்கி அச்சபையிலாவது நமது சமூகத்தின் சுதந்திரமான குரல் எழுப்பப்படுவதற்கு முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.



3 comments:

  1. ஆதலால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கதிட்கு வாக்களிப்பதன் மூலம் இஸ்லாம் நடைமுறைசாத்தியமானது என்பதை உலகிட்கு நிறூபிய்யுங்கள் இல்லையேல் இஸ்லாத்தை நடைமுறை சாத்தியம் அற்றது என நிராகரித்த பழிபாவம் உங்களை சேறும்???

    ப்ப்….பா…. தாங்க முடியல வானலோகத்தில் வாழ்வோர் பூமியில் வந்து பேசுவதாக நினைத்துகொண்டு பேசுகிறார்கள் நடைமுறையில் இவர்களின் அரசியலுக்கும் ஏனைய்ய அரசியல் வாதிகளுக்கும் எந்த வித்தியாசத்தையும் மக்கள் காண முடியவில்லை

    இவர்களும் அடுத்தவனை குறை சொல்வதட்கும் அவனது தவருகளை ஊதி பெரிதாக்கி அதனைபேசி பேசியே வாக்கு கேட்பதட்கும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல!!! ஆக மொத்ததில் இஸ்லாத்தையும் வைத்து கடைசியில் அரசியல் செய்ய வெளிகிட்டு இருக்கிரார்கள் தங்களுக்கு வாக்களித்தால் அல்லாஹ்விடம் போய் பதில் சொல்ல வேண்டியதில்லை அடுத்தவர்களுக்கு வாக்களித்தால் அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆக வேண்டுமாம்??? சுத்த வடிகட்டிய வங்குரோத்து தனமான பேச்சா இருக்கிறதே??

    ReplyDelete
  2. வாங்க ராசா வாங்க. உண்மைய சொன்னா உங்களுக்கு பொறுக்காதே.. கன்துடைப்பு தேர்தல்கால அபிவிருத்திய செய்தா மட்டும் உங்குட மண்ணின் மைந்தர தலையில தூக்கிவச்சி ஆடுங்க. முதல்ல சிலிங்கோ காச குடுக்க சொல்லுங்க உங்குட மேதாவி ஹிஸ்புல்லாவ.

    ReplyDelete
  3. Naseeh Ahamed Ali Akbar ஹிஸ்புல்லாஹ் நேக்கு யாறுங்க நான் ஏன் உங்க வேண்டுதல அவருட்ட சொல்லனும் நீங்களே நேரடியா அவருட்ட சொல்லலாமே ??? அவர் என்ன சர்வ வல்லமை படைத்த சக்தியா நீங்க பயந்து நடுங்கி இங்கவந்து சொல்ல?

    ReplyDelete

Powered by Blogger.