அநீதிகளும், அநியாயங்களும் இதற்கப்பாலும் நடைபெறுவதைத் தடுக்கவேண்டும் - ரவூப் ஹக்கீம்
டாக்டர் ஹபீஸ்
'கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றுக்கிடையிலான மும்முனைப் போட்டியாக மாறியிருக்கின்றது.' இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஒலுவில் கிராமத்தில் நடைபெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்தத் தேர்தல் ஒரு பெரிய கண்டத்தை உருவாக்கியிருக்கின்றது. இந்தக் கண்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு தாண்ட வேண்டியிருந்தால், அதற்குப் பலவீனமான பிரதேசங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதாலும் எங்கெல்லாம் மாற்றுக் கட்சிகளுக்கு சற்று இடமிருக்கின்றது என்ற அறிகுறிகள் தென்படுகின்றனவோ அங்கெல்லாம் அவதானத்தைச் செலுத்த வெண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. மாற்றுக் கட்சிக் காரர்களின் ஊருடுவலுக்கு இங்குள்ள கட்சிப் போராளிகளின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் அறவே இடமளிப்பதில்லை.
எல்லா பத்திரிகைகளும் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக என்னைச் சித்திரிக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் முக்கியத்துவத்தை அது உணர்த்துகின்றது. நான் சாதாரண மனிதன் ஒருவனாக இருந்தால் எனது பேச்சுகளுக்கு பெரிய சர்ச்சைகள் உருவாகி இராது.
கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்பார்கள். இவ்வளவு காலமாக மூடுமந்திரமாக இருந்த விஷயங்களை வெளிப்படையாக சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்துவந்த அநீதிகளும் அநியாயங்களும் இதற்கப்பாலும் நடைபெறுவதைத் தடுப்பதற்கு அது உதவும்.
ஆனால் அதனோடு அப்பிரச்சினைகள் முற்றுப் பெற்றுவிடப் போவதில்லை. இவற்றுக்கான காப்பீடு இந்த சமுகத்தின் ஒற்றுமையில் மட்டுமே தங்கியுள்ளது. திருக்குர்ஆன் வலியுறுத்தும் ஒற்றுமையின் அவசியத்தை தாரகமந்திரமாக கொண்டுதான் இத்தனிப்பெரும் கட்சியே உருவானது. ஓற்றுமையை பற்றிப் பிடிப்பதோடு பிரிந்துவிடாதீர்கள் என்றும் வலியுறுத்தும் திருமறை வசனம் எங்களது அரசியல் தலைமைகள் மத்தியில் செவிடன் காதில் ஊதிய சங்காக இருப்பது மிகவும் கவலைக்குரியது.
ஏங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மையப்படுத்தி அதுவும் தலைமையை மாத்திரம் மையப்படுத்தி காட்டமான விமர்சனங்களை செய்து கொண்டு வருகின்றார்கள். எதெற்கெடுத்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் தலையில் தேங்காய் உடைப்பதையே அரசாங்கக் கட்சியில் போய் அடைக்கலம் தேடி இருக்கும் மாற்றுக்கட்சித் தலைமைகளின் வேலையாகப் போய்விட்டது.
கடந்த சில நாட்களாக நாங்கள் பேசி வருகின்ற விடயங்கள் அரச மேலிடத்திற்கு சற்று அதிருப்தியை கொடுத்த்ருக்காலாம். மக்கள் மத்தியில் பூசி மெழுகி அரசியல் செய்ய முடியாத காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்பதையும் அரச மேல்மட்டம் உணர்ந்து கொள்ள வேண்டும். மிகப் பொறுப்புணர்ச்சியுடன் நோக்கினால் இந்த உண்மை அரச மேலிடத்திக்கு புரியும்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த இப்தார் நிகழ்வில் நான் பங்குகொள்ளாது அதைப் பகிஷ்கரித்ததாக ஞாயிறு பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கட்டுரை நன்றாக இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதியின் இப்தாரில் கலந்து கொள்ளாததற்கு கொஞ்சம் காதும் மூக்கும் வாயும் வைத்து சோடனையாக எழுதப்பட்டுள்ளதை நான் பார்த்தேன்.
உண்மையில் அன்று காலையில் நான் ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தோப்பூரில் இப்தாரில் கலந்து கொண்டு கட்சிப் பிரசாரப் பணிகளிலும் ஈடுபட வேண்டியிருப்பதால் அவரது இப்தாருக்கு வர முடியாதிருப்பதைப் பற்றி தெரிவித்தேன். அதனை அவர் பொருந்திக் கொண்டதோடு எனது பிரச்சாரங்களைப பற்றி அவரது அபிப்பிராயங்கள் சிலவற்றையும் சொன்னார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல அரசுக்கு அடகு வைக்கப்பட்ட தொன்றாக இருக்க முடியாது என்பதை அவருக்கு மிகத் தெளிவாகக் கூறினேன். அவரோடு உரையாடிய அந்தச் சிலநிமிடங்களில் நான் தெரிவித்தவற்றை அவர் மிகவும் பக்குவமாக புரிந்து கொண்டிருக்கின்றார் என்று நான் நம்புகின்றேன்.
ஆனால் தொடர்ந்தும் ஜனாதிபதியை குழப்புகின்ற நடவடிக்கைகளில் பலரும் ஈடுபடக்கூடும். நான் பேசுகின்ற செய்திகள் பத்திரிகைகளில் வரும் போது அது நான் கூறியதைவிடவும் அழுத்தமாக வெளி வருவதாக ஜனாதிபதியின் குறுகிய உரையாடலில் இருந்து என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
உங்களது அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் என்ற முறையில் அரசைப் பாதுகாக்கும் விதத்தில் சில விடயங்களை என்னால் சொல்ல முடியுமே தவிர, எல்லாவற்றையும் விமர்சிக்காமல் என்னால் தவிர்ந்து கொள்ள முடியாது என்ற தொனியில் அவரிடம் நான் சொன்னேன். அதனையும் அவர் ஏற்றுக் கொண்ட மாதிரித்தான் எனக்குத் தெரிந்ததது.
அவை ஒருபுறமிருக்க, முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் இந்த கிழக்கு மாகாண தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்ற இச்சந்தர்ப்பத்தில் நாம் பெறப்போகின்ற ஆசனங்களின் எண்ணிக்கைதான் இந்தச் சமுகத்தின் காப்பீடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஏனைய தேர்தல்களைப் போல் இந்த மாகாண சபைத் தேர்தலையும் ஒரு சாதாரண தேர்தல் என நாங்கள் எடைபோட்டால், எந்தவிதத்திலும் அது சரியான கணிப்பீடாக மாட்டாது.
அண்மைக்காலமாக நிகழ்ந்த எந்தத் தேர்தலைவிடவும் வித்தியாசமான ஒரு நிலைமை இப்போது காணப்படுகின்றது.
புலிகள் இருந்த காலத்தில் அவர்களது பயங்கரவாதம் எங்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக இருந்தது. இன்று புலிப்பயங்கரவாதம் இல்லாத சூழ்நிலையில் இந்த நாட்டில் முழுமையான சமாதானம் நிலவுகின்றது என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கின்றனர் என்ற பின்னணியில் நடைபெறும் இத்தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாகும்.
யுத்தம் முடிந்த சூழ்நிலையில் தேர்தல்கள் நடந்தன என சிலர் சொல்லலாம். அந்தத் தேர்தல்களுக்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளராட்சித் தேர்தல் என்பனவெல்லாம் ஏன் இந்தத் தேர்தலில் இருந்து வேறுபடுகின்றன என சிலர் கேள்வி எழுப்பலாம்.
ஊள்ளராட்சித் தேர்தலை ஒருபுறம் வைத்துவிட்டு, ஏனைய தேர்தல்கள் ஒரு அசாத்தியமான சூழலிலேயே நடைபெற்றன. அன்று எல்லோரும் சுதந்திரமாக வாக்களிக்கும் ஒரு நிலைவரம் இருக்கவில்லை. அநேகர் சுதந்திமாக வாக்களித்தாலும், தேர்தலில் பங்குபற்றும் தரப்புகள் நம்பகத்தன்மை வாய்ந்தனவாக இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முதற்றடவையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்லில் போட்டியிடுகின்றது என்ற விடயம் இந்தத் தேர்லின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கின்றது. அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத சூழ்நிலையில் அரசின் அங்கமாக இருக்கும் தமிழ் ஆயுதக்குழுக்கள் அச்சுறுத்தி அபகரித்த வாக்கு வேட்டையைப்போல் யாரும் இலகுவில் செய்துவிட முடியாது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அரசியல் பிரவேசம் மாகாண சபைத் தேர்தலை முற்றுமுழுதாக மாற்றியிருக்கின்றது.
தற்பொழுது போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்;திர முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் என மூன்று சமுகங்களினதும் பிரதிபலிப்பு எனப் பார்த்தாலும், அரசாங்கத் தரப்பு முஸ்லிம் அடிவருடி அமைச்சர்கள் என்றும், ஏனைய தமிழ் போராட்டத் தலைமைகள் புலிகளிடத்தில் இருந்து விலகி அரசாங்கத்தில் இரண்டறக் கலந்து அடைக்கலமாகியிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஓரளவு தமிழ் முஸ்லிம் வாக்குகளை கொடுத்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற உதவும் தரப்புகளாக மாறியிருக்கின்றார்கள்.
கிழக்கில் பயங்கரவாதத்தை தோற்கடித்துவிட்ட ஆணவத்திற்கு சென்ற மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்திய போது எதிர்க்கட்சியில் இருந்து பாராளுமன்ற ஆசனங்களை தூக்கி எறிந்துவிட்டு அச்சுறுத்தல்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் மத்தியில் இச்சமுகத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாங்கள் போட்டியிட்டோம்.
ஆனால் அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் வரையான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளின் விளைவாக, அம்பாறை மாவட்டத்தை கைப்பற்றுதை இரண்டு ஆசன வித்தியாசத்தில் நாங்கள் இழந்துவிட நேரிட்டது.
அடுத்த தேர்தலில் முஸ்லிம் வாக்குகளையும் இயலுமானவரை சிங்கள வாக்குகளையும் பெற்றுக்கொள்வதற்காக வியூகம் வகுத்து ஐக்கிய தேசியக்கட்சியில் அப்போது நாங்கள் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் எங்களுக்கு நிச்சயம் கிடைத்திருக்க வேண்டிய வெற்றிவாய்ப்பு எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது என்பதை அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டினர்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் போட்டியிடுவதால் நிலைமை மாறியிருக்கின்றது. முன்போல பாரிய தேர்தல் மோசடிகளில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்க முடியாது. எனது பர்வையில் புதிய தேர்தல் ஆணையாளரும் பொலிஸாரும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு எவ்வாறு மக்களை தயார்படுத்துவது, வாக்களிப்பு வீதத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பன போன்ற வியூகங்களை நாங்கள் வகுத்துக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இத்தேர்தலுக்கான ஈடுபாடு அதிகரித்திருக்கின்ற நிலையில், முஸ்லிம் காங்கிரசும் தனது வாக்கு வங்கியை இன்னும் கூட்டிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு உண்டு. ஆனால் அதற்காக ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபட வேண்டியிருக்கின்றது. தயார்படுத்தலைச் செய்யவேண்டி இருக்கின்றது. கடந்த மாகாண சபைத் தேர்தலில் மொத்த வாக்களிப்பு 60 வீதத்தை தாண்டாத நிலையில்தான், அம்பாறை மாவட்டத்தை வெற்றிகொள்ளும் வாய்ப்பை இரண்டு ஆசன வித்தியாசத்தில் இழந்தோம்.
பல வாக்குச் சாவடிகளில் நடந்த பாரிய மோசடிகளினால்தான் நாங்கள் அந்த வெற்றி வாய்ப்பை இழந்தோம். இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமாகும்.
அக்கரைப்பற்றை எடுத்துக் கொண்டாலும் அங்கு வேட்பாளர்கள் மூவரை களத்தில் இறக்கியுள்ளோம். அங்கு முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் தவம் எங்களோடு வந்து சேர்ந்துள்ளார். இந்தப் பின்னணியில் ஒரு பாரிய மாற்றம் அடிவருடி அமைச்சரின் சொந்தக் கோட்டையிலேயே ஏற்படப் போகின்றது. கோட்டையில் ஓட்டை விழுந்துள்ளது என மக்கள் பேசத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் வழமைபோன்று அடாவடித்தனம் நேற்றிரவிலிருந்து கொஞ்சம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. பொலிஸாருடன் உயர்ந்தமட்டத்தில் பேசி, நிலைமையை சுமுகமாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வழமையான அடாவடித்தனமின்றி தேர்தலுக்கு அவரால் முகம்கொடுக்க முடியாது என்ற நிலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் அவரைத் தள்ளியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்குபற்றுதல் என்பது இந்தத் தேர்தலில் தெளிவான ஒரு இயல்பு நிலையை தோற்றுவித்துள்ளது.
தெஹியத்தக்கண்டிய போன்ற சிங்களப் பிரதேசங்களில் நாற்பத்தைந்து முஸ்லிம் காங்கிரஸ் கிளைகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம். சிங்கள வேட்பாளர்களையும் போட்டியிடச் செய்து அவர்களையும் வெல்ல வைக்க முடியும் என்ற முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே சிங்களப் பிரதேசங்களில் இந்த முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். அங்கு மிக வேகமாக சிங்களப் பெண்கள் கூட முஸ்லிம் காங்கிரஸிற்கான பிரசாரப் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அங்கு வந்தால் பார்க்கலாம்.
பொதுவாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சவாலே அல்ல. இந்த மாவட்டத்தை கைப்பற்றுவதில் அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும்தான் போட்டி நிலவுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் அங்குமிங்குமாக முஸ்லிம் வேட்பாளர்கள் சிலரை போட்டியிட வைத்திருந்தாலும், அவர்களால் முஸ்லிம் வாக்கு வங்கியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் என்று ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றதோ அன்றிலிருந்து அதன் முஸ்லிம் வாக்கு வங்கி சூன்யமாகி, வெற்றிடமாகிவிட்டது.
ஆனால் சிங்களப் பிரதேசங்களில் விலைவாசி ஏற்றம், ஊழல் மோசடிகள், இஸட்-ஸ்கோர் விவகாரம் என்பனபற்றி கூறி, ஆளும் கட்சியின் வாக்குகளில் சரிவை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது.
என்னைப் பொறுத்தவரை இத்தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றுக்கிடையிலான மும்முனைப் போட்டியாக மாறியிருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிழக்கு மாகாண சபையில் மூன்று ஆசனங்களுக்கு மேல் வெல்ல முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் என்பன தலா பத்துக்கு மேற்பட்ட ஆசனங்களை வெல்லும். ஆனால் தனித்து யாரும் ஆட்சியமைக்க முடியாது.
அரசாங்கமோ தமிழ்த் தேசிய கூட்டமைப்போ ஒன்றோடொன்று சேரப் போவதில்லை. என்பது பொதுவாக அரசியல் அவதானிகள் ஏற்றுக் கொள்கின்ற விடயமாகும். ஆகவே அக்கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய பத்து அல்லது அதற்கு சற்றுக்கூடிய, அல்லது குறைந்த ஆசனங்களை வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவின்றி யாரும் ஆட்சியதிகாரத்தை கிழக்கு மாகாணத்தில் கைப்பற்றிவிட முடியாது என்பது பொதுவான அவதானிப்பு ஆகும்.
அரசாங்கம் கிழக்கு மாகாண சபையை கலைத்தபோது முஸ்லிம் காங்கிரஸின் முக்கியத்துவத்தை எவ்வளவு தூரம் கணக்கில் எடுத்தார்களோ எனக்குத் தெரியாது, ஆனால் ஆட்சியின் அங்கமான எங்களை அரசாங்கத்தினர் கலந்தாலோசிக்கவேயில்லை. ஆகவே அதிமேதகு ஜனாதிபதி முதல் அரசாங்கத்திலுள்ளவர்கள் இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்தப்போகும் தாக்கம்பற்றி சிந்திக்கத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.

Post a Comment