சிரியா ரசாயன ஆயுதங்கள் பாவித்தால் அதன்மீது தாக்குவோம் - ஒபாமா எச்சரிக்கை
சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத்துக்கு எதிராக போராடும் பொதுமக்கள் அவரது ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். 17 மாதங்களாக நடைபெறும் கலவரத்தில் இதுவரை 18 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் சிரியாவை விட்டு வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைந் துள்ளனர். 2 லட்சம் மக்கள் உணவு பொருள் எதுவும் கிடைக்காமல் உதவிக்காக காத்து இருக்கின்றனர்.
இந்த தகவலை ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அங்கு ஜனநாயகத்தை மலர செய்து, அமைதி ஏற்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதற்கு அதிபர் ஆசாத் பதவி விலகவேண்டும் என கோரிக்கை விடுத்தும், இதை ஏற்க அவர் மறுத்து வருகிறார். சமீபத்தில் சிரியாவின் அமைதி தூதராக ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட லக்தர் பிராகிமியின் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் டமாஸ்கஸ் அலெப்போ, டெர்ரா ஆகிய நகரங்களில் போராட்டக்காரர்கள் மீதும், கிளர்ச்சி படையின் மீதும் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ரம்ஜான் அன்று நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளது. இதை அந்த நாடே ஒப்புக்கொண்டுள்ளது. தங்களை எதிர்த்து போராடும் மக்கள் மீது அந்த ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம். அதேநேரம் வெளிநாடுகள் தலையிட்டால் அவற்றை பயன்படுத்துவோம் என கூறியிருந்தது. இதன்மூலம் அங்கு ரசாயன ஆயுதங்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது அங்கு நடைபெறும் செயல்களை பார்க்கும்போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவது போல் தெரிகிறது. அது உறுதி செய்யப்பட்டால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.
சிவப்பு கோட்டை தாண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிரியா மீது அமெரிக்க ராணுவம் போர் தொடுக்கும். இதுகுறித்து இஸ்ரேல் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஆலோசித்து வருகிறோம் என எச்சரிக்கை விடுத்தார்.

Post a Comment