காஷ்மீர் முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை மதியுங்கள் - பாகிஸ்தான் கோரிக்கை
காஷ்மீர் விஷயத்தில் தாமதிக்கும் தந்திரங்களை இந்தியா கையாள்வதைத் தவிர்க்க வேண்டும்; ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் பேசினார்.
பாகிஸ்தான் சுதந்திர தின விழாவையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்ட வல்லுநர்கள், ராணுவ உயர் அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் முன்னிலையில் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:÷காஷ்மீர் பிரச்னை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையை மதித்து நடந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக தாமதிக்கும் தந்திரங்களை இந்தியா கையாள்வதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம், இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், சுபிட்சமும் ஏற்படும் வகையில், இந்தியாவுடன் நட்பு பாராட்டி உறவை மேம்படுத்தவே பாகிஸ்தான் விரும்புகிறது.
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் பேச்சு நடத்தி தீர்வு காணவே ஆசைப்படுகிறோம். இப்போது இந்தியாவுடன் வர்த்தக உறவுகளைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் இருநாடுகளுமே பரஸ்பரம் பலன் பெற்று வருகின்றன. இருநாட்டு மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்கும் வர்த்தகத் தொடர்புகள் பயன்படுகின்றன.
அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் பரஸ்பர மரியாதை கலந்து உறவைப் பேண விரும்புகிறோம். நமது உண்மையான செயல்பாடுகளின் மூலம், அந்நாடுகளுடனான உறவு நேர்மறையான திசையில் சென்று கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் தனது இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் வகையில் எந்தவிதமான சமரசத்திலும் ஈடுபடாது என்பதை அமெரிக்காவுக்குத் தெளிவுபடத் தெரிவித்துவிட்டோம். குறிப்பாக எல்லைப் பகுதியில் அமெரிக்கா நடத்தும் ஆளில்லாத விமானங்களின் தாக்குதல், நமது இறையாண்மையில் குறுக்கிடும் வகையில் அமைந்துள்ளது. நிதி உதவி பெறுவதைவிட, வர்த்தக உறவை மேம்படுத்தவே விரும்புகிறோம்.
வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் பிரதிநிதிகளின் கருத்தையும் கேட்டே முடிவு செய்து வருகிறோம்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பன்னாட்டுப் படைகளுக்கு பாகிஸ்தான் வழியாக உணவு உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை 7 மாதங்களுக்குப் பின் விலக்கிக் கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே அனுமதி அளிக்கப்பட்டது.
இஸ்லாமிய நாடுகளும் அங்கம் வகிக்கும் பன்னாட்டுப் படைகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது என்பதாலும், ஆப்கனில் நடைபெற்றுவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பின்னடைவு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்தோம்.
அமெரிக்காவுடன் முன்புபோல வாய்வார்த்தையாக எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படுவதில்லை; சமீபத்தில் பாகிஸ்தான் வழியாக நேட்டோ படைகளுக்கு சரக்கு வாகனங்களை கொண்டு செல்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக எழுத்துபூர்வமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அசாதாரணமான தருணங்களில் ஆப்கானிஸ்தானுடன் தோளோடு தோள் நிற்கத் தயாராக உள்ளோம்; அங்கு அமைதியை ஏற்படுத்துவதிலும் முன்னணியில் இருப்போம்.
ஆப்கனில் நிலையான தீர்வை அந்நாட்டு மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தானின் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஆப்கனைச் சார்ந்துள்ளது. எனவே, அங்கு அமைதி வழியில் பிரச்னையை தீர்க்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனாவுடனான உறவு பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் தூண் போன்று முக்கியத்துவம் வாய்ந்தது. சீனா நமக்கு எப்போதும் நெருக்கமான, நம்பகத்தன்மையுள்ள நண்பன் என்றார் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப்.

யா அல்லாஹ், எகிப்திலும், துருக்கியிலும் நீ ஏற்படுத்தியுள்ளது போன்ற அறிவு பூர்வமான, துணிச்சலான ஆட்சியாளர்களை பாகிஸ்தானிலும் ஏற்படுத்துவாயாக.
ReplyDelete