முஸ்லிம் சமூகம் மட்டுமே பிரிந்து நிற்கின்றது - ஏ.எம்.ஜெமீல்
அஸ்லம் எஸ்.மௌலானா
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கில் நாம் அனைவரும் ஒன்றுபட்டால் ஆட்சியில் பங்காளிகளல்ல, நாம் தனித்தே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் அறைகூவல் விடுத்துள்ளார்.
சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது;
"அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 44 வீதமும் சிங்களவர்கள் 37 வீதமும் தமிழர்கள் 18 வீதமும் உள்ளனர். தன்மானமுள்ள முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் புத்திஜீவிகள் நன்கு சிந்தித்து களமிறங்கினால் அம்பாறை மாவட்டத்தை ஏன் எம்மால் வெற்றி ஈட்ட முடியாது?
அதேபோல் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 42 வீதமும், தமிழர்கள் 32 வீதமும், சிங்களவர்கள் 25 வீதமும் உள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தையும் எம்மால் வெற்றி கொள்ள முடியும் என்று நான் திடமாக நம்புகின்றேன். மட்டகளப்பு மாவட்டத்தில் நாம் இரண்டாம் நிலையில் உள்ளோம். அங்கு நாம் கணிசமான ஆசனங்களைப்பெற முடியும். இந்நிலையில் முழுக் கிழக்கு மாகாணத்திலும் நாமே கூடிய ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு நம் கண் முன்னே தெரிகிறது.
இன்று ஊடகங்களைப் பார்க்கும்போது அனைவரும் இன ரீதியாக சிந்தித்தே பிரச்சாரம் செய்கின்றனர். நமது முஸ்லிம் சமூகம் மட்டுமே பிரிந்து நிற்கின்றது. எமது தேர்தல் வியாபாரிகளும், புறோக்கர்களும் அற்பக் கிரயத்திற்கு எமது வாக்குகளை பேரினத்திற்கு விற்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இளைஞர் சமூகம் நன்கு சிந்தித்து புத்திசாதுரியமாக செயற்பட்டால் எதிரிகளின் சதித் திட்டங்களை முறியடித்து எம்மால் கிழக்கில் தனித்து ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று நான் உறுதியாகக் கொள்கின்றேன்..
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கமானது எமது சமூகம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்தி எமக்கான தீர்வைப் பெற முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தவே சமூக ரீதியாக சிந்திக்கின்றது. இது தவிர நாட்டில் வாழ்கின்ற சகோதர சமூகங்களுடன் ஐக்கியத்துடன் சுமுகமாகவே வாழவே விரும்புகின்றது.
இந்த தேர்தலில் பிரதேச ரீதியாக சிந்தித்து விருப்பு வாக்குகளுக்கு துனைபோய் பிரிந்து விடாமல் கட்டாயமாக மரச் சின்னத்திற்கு அனைத்து முஸ்லிம் மக்களும் வாக்களித்து எமது ஒற்றுமையை இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டி மிக விரைவில் ஏற்படப்போகும் இனப்பிரச்சினை தீர்வில் எமது பங்கையும் உரிமையுடன் கேட்டுப்பெற இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மிகவும் ஆணித்தரமாக முஸ்லிம்கள் அனைவரையும் மிகவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.
நமது வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் நீண்ட கால அபிலாசைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை தவற விடுவோமாயின் நமக்கு இனி ஒருபோதும் இவ்வாறான வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இத்தேர்தல் வெறுமனே தனி நபர்களைத் தெரிவு செய்து வீதி அபிவிருத்தி கொந்தராத்துகளை செய்வதற்கான ஒரு ஏற்பாடு அல்ல. நிச்சயமாக இது முஸ்லிம் சமூகத்தைப் பொருத்தமட்டில் அபிவிருத்தி கோஷங்களுக்கு அப்பால் சமூக இருப்பு, பாதுகாப்பு, மதச் சுதந்திரம் மற்றும் கல்வி, பொருளாதார அம்சங்களை மேம்படுத்துவதற்கான அதிகாரத்தையும் நல்லாட்சியையும் உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்காக நமக்குத் தரப்படுகின்ற ஓர் பேராயுதமாகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்

முஸ்லிம் காங்கிரெஸ் உருவாக்கி இது முதல் தேர்தலா ? எத்தனை தடவை முஸ்லிம்கள் உயிரை பணயம் வைத்து ஒற்றுமை பட்டு கடந்த களத்தில் வாக்களித்தனர். சுயநல பாவிகள் அனைத்தையும் தமது உள்ளசங்களுக்காக விற்று விட்டார்கள். இவர் நான்கு வருடங்கள் கிழக்கு சபை உறுப்பினராக இருந்தார். சமுகத்துக்கு செய்த ஒரு நன்மையை கூற முடியுமா? முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது வெறும் வாக்குகளுக்காக அல்ல. அல்லாஹ்வுக்காக அரசியல் செய்ய வேண்டும் என்ற உணர்வுள்ளவர்களுடந்தான் ஒற்றுமை படலாம்/ சுயநலவாதிகள் அடுத்ததேர்தலிலும் இதே பாட்டைதான் படுவர்.
ReplyDelete