அசாம் + மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை
அசாம் கலவரத்தைக் கண்டித்து மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
அசாம் கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மியான்மரில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் ராஸா அகாதெமி என்ற அமைப்பின் சார்பில் மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் சனிக்கிழமை மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிலையில், திடீரென வன்முறை ஏற்பட்டது. ஊடக நிறுவனங்கள் மற்றும் காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களுக்கு கலவரத்தில் ஈடுபட்டோர் தீவைத்தனர்; அந்த வழியாகச் சென்ற பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தினர்.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இக்கலவரத்தில் போலீஸார், நியூஸ்24 என்ற ஹிந்தி செய்தித் தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் உள்பட 16 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தையடுத்து புறநகர்ப் பகுதிக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பல இடங்களில் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை காவல் துறை ஆணையர் அரூப் பட்நாயக் கூறியது: வன்முறைக்கான காரணம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்'' என்றார்.
அமைச்சர் ஆலோசனை: மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், அனைவரும் அமைதியாக இருக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். வன்முறை சம்பவம் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது தொடர்பாகவும் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே ராஸா அகாதெமியின் பொதுச் செயலாளர் முகமது சயீத் கூறுகையில், ""இந்த வன்முறைச் சம்பவத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. வன்முறையை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம்'' என்றார்.

Post a Comment