Header Ads



முஸ்லிம் ஊடகவியலாளர்க்கு ஆப்பு வைத்த அமெரிக்க ஊடகங்கள்


மற்றொருவர் எழுதிய கட்டுரையிலிருந்து சிறுபகுதியை எடுத்து எழுதிய புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஃபரீத் ஜக்கரியா (48) டைம் இதழ் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 டைம் இதழில் வெளியான "தி கேஸ் ஃபார் கன் கன்ட்ரோல்' எனும் கட்டுரையில் எழுதிய சிறு பகுதி "நியூ யார்க்கர்' இதழில் வெளியான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது என்று ஜக்கரியாவே ஒப்புக் கொண்ட பின்தான் அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவர் இடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது கட்டுரை இந்த மாதம் வெளிவராது என்று டைம் இதழ் தெரிவித்தது.

கருத்துத் திருட்டுக்காக ஜக்கரியா மன்னிப்புக் கேட்டார். தான் தவறு செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

 "ஜக்கரியாவின் மன்னிப்பை டைம் இதழ் ஏற்றுக் கொள்கிறது. இருப்பினும் டைம் இதழில் கட்டுரை எழுதுபவரின் தரத்தை ஜக்கரியா மீறிவிட்டார். கட்டுரையாளர் கூறும் கருத்துகள் உண்மையாக இருத்தல் மட்டும் போதாது; அது அவருடைய சொந்தக் கருத்துகளாகவும் இருக்க வேண்டும்' என்று டைம் இதழின் செய்தித் தொடர்பாளர் அலி ஸிலன்கோ தெரிவித்தார்.

நியூ யார்க்கர் இதழில் வெளிவந்திருந்த கட்டுரை ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜில் லிபோரியால் எழுதப்பட்டது.
சிஎன்என் தொலைக்காட்சி: ஜக்காரியா, சிஎன்என் தொலைக்காட்சியில் வெளிநாடு விவகாரங்கள் குறித்த நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். டைம் இதழில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிஎன்என் தொலைக்காட்சியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

காலவரையறையின்றி அவரது நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்தது.

அவர் எழுதிய டைம் இதழ் கட்டுரை குறித்து ஆய்வு செய்தோம். இதே விவகாரம் குறித்து அவர் சிஎன்என்.காம் இணையதளத்தில் எழுதியிருந்தார். அது இப்போது நீக்கப்பட்டுள்ளது என்றும் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சிஎன்என் நிறுவனம் தெரிவித்தது.

மன்னிப்பு கோரினார் ஜக்கரியா: இது தீவிரமான கவனக்குறைவு. இதற்கு முழுக்க முழுக்க என்னுடைய தவறே காரணம். இதற்காக லிபோரா, இதழ் மற்றும் தொலைக்காட்சியின் ஆசிரியர்கள், வாசகர்கள் மற்றும் தொலைக்காட்சி ரசிகர்கள் ஆகியோரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் என்றார் ஜக்காரியா.
மும்பையைச் சேர்ந்தவரான ஜக்காரியா, யேல் மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை முடித்தவர். பத்திரிகைப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக 2010-ம் ஆண்டில் அவருக்கு "பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.