Header Ads



உயிராபத்து அச்சுறுத்தல் - ஹக்கீமிடம் உன்னிச்சை முஸ்லிம்கள் முறைப்பாடு (படங்கள்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் பாவற்கொடிச்சேனைக்கு அண்மையில், உன்னிச்சை, இருநூறுவில் என்ற இடத்தில் மீள்குடியேறிவரும் முஸ்லிம்களுக்கு உயிராபத்து அச்சுறுத்தலும், அவர்களது இருப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ஹக்கீமிடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளனர்.

ஞாயிறு அதிகாலை 2.30 மணியளவில் அங்கு நடைபெற்ற அசம்பாவித சம்பவங்கள் இரண்டில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளதோடு அங்குள்ள முஹிதீன் பள்ளி வாசலுக்கும் தீயூட்டப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்று எரியூட்டப்பட்ட பள்ளிவாசலை பார்வையிட்ட அமைச்சர் ஹக்கீம் அங்கிருந்தவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். பிரதி பொலிஸ் மாஅதிபர் வைத்தியதிலக உடனும் ஏனைய பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்கவும், நடமாடும் பொலிஸ் சேவையை  ஏற்படுத்தவும், நிர்க்கதியான முஸ்லிம் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குச் சென்று காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பெண்ணையும் அவர் பார்வையிட்டு, நிலைமையை கேட்டறிந்ததோடு சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவை ஏற்படின் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அவர் அனுமதிக்கப்பட்டுள்ள 12ஆம் வார்ட் மருத்துவ அதிகாரியிடம் இப்பெண்மணியை சட்டமருத்துவ அதிகாரியிடம் காண்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும் அவர் வினவினார். அதற்கு சாதகமான பதில் கிடைத்தது.

அங்கு மீள்குடியேறும் மக்களுக்குரிய அரச வாழ்வாதாரங்கள், இழப்பீடுகள் என்பவற்றை வழங்க வவணதீவு மேற்கு பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காதது பற்றி அவர் விசனம் தெரிவித்தார். ஏறத்தாழ 3 மாதங்களுக்கு முன்னர் தாம் அவரைச் சந்தித்து அவற்றைத் துரிதப்படுத்தும்படி கேட்டிருந்த போதும் அவர் அதனை கவனத்தில் எடுக்காதது குறித்தும் அமைச்சர் ஹக்கீம் ஆத்திரம் வெளியிட்டார்.

தேர்தலை எதிர்நோக்கியுள்ள வேளையில் முஸ்லிம், தமிழ் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் குறுகிய நோக்கத்துடன் பிரச்சினைகளை உண்டுபண்ணுவதற்காக தீய சக்திகள் இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் செயல்பட்டிருக்கக்கூடும் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.

தாம் இச்சம்பவம்பற்றி தமிழர் அரசியல் தரப்புடனும் கலந்து ஆலோசிக்க உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.  அமைச்சருடன் கிழக்கு மாகாண சபை வேட்பாளர்களான முபீன், சல்மா ஹம்சா ஆகியோரும் சென்றிருந்தனர். 



2 comments:

  1. சும்மா பம்மாது அரசியல் செய்யாமல் உன்னிச்சையில் தனியான கிராம சேவர் பிரிவை உருவாக்கி அதட்கு முஸ்லிம் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுங்கள் பாதிக்கபட்டவர்களின் காணிகள் மீள பெற தமிழ் தேசிய கூட்டமைபே தடையாக இருப்பதால் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து தேவையற்ற தலையீட்டை தவிருகுமாறு கோறுங்கள்

    ReplyDelete
  2. @ Fashlin Mohammed,
    தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ரவூப் ஹக்கீமின் உற்ற நண்பர்கள் ஆச்சே. நட்பு எதற்குப் பயன்படுகின்றது என்பதைப் பார்ப்போமே!

    ReplyDelete

Powered by Blogger.