பாகிஸ்தானில் 18 கோடி மக்கள் - ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் இல்லையென கண்டனம்
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில், ஒரு பதக்கத்தை கூட வெல்ல முடியாதது குறித்து, பாகிஸ்தான் பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து, பாகிஸ்தானின் "டான்' பத்திரிகை தனது தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: லண்டனில் கடந்த மாத இறுதியில் துவங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் முடிந்தன. இதில், அதிக பதக்கங்களைப் பெற்று, அமெரிக்கா முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும், போட்டியை நடத்திய பிரிட்டன் நாடு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆனால், 18 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானால், ஒரு பதக்கம் கூட பெற முடியவில்லை. பாகிஸ்தானில் விளையாட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இது மிகவும் வெட்கக்கேடானது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க, பாகிஸ்தானில் இருந்து 20 வீரர்கள் சென்றனர். இந்த வீரர்கள் எவரும், பெரிய அளவில் எந்த சாதனையையும் அங்கு நிகழ்த்தவில்லை. எனவே, பாகிஸ்தான் விளையாட்டு அமைப்புகளில் இடம் பெற்றிருப்பவர்களை உடனடியாக மாற்றி விட்டு, எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், அதற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment