குருநாகல் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு - பொலிஸ் பாதுகாப்புடன் தொழுகை - என்.எம். அமீன் தகவல்
குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டு, அங்கு தொழுகைகள் நடைபெற்றுவருவதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
குறித்த பகுதியில் நேற்று பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் தற்போது அங்கு அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கும் அருகாமையில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்கிழமை பள்ளிவாசல் மூடப்பட்ட சம்பவம் தொடர்பில் அறியக்கிடைத்ததும் உடனடியாக ஜம்மியத்துல் உலமா சபை, முஸ்லிம் கவுன்சில் மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகள் இதுதொடர்பில் ஆர்வம் செலுத்தி பாதுகாப்பு உயர் தரப்பினருடன் பேசினர். பொலிஸ்மாத அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
அவர் இவ்விடயத்தின் உடனடியாக தலையிட்டார். இதனால் மூடப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வழமைபோன்று அங்கு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் உலமா சபையும், முஸ்லிம் கவுன்சிலும் இணைந்து பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவை சந்தித்தோம். இதன்போது அவர் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏடீற்படும் போது உடனடியாக தமது கவனத்திற்கு கொண்டுவருமாறு கூறினார். அதன்படி நாம் செயற்பட்டதால் குருநாகல் பள்ளிவாசல் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலவங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறு சிக்கல்கள் ஏற்படும்போது பிரதேச முஸ்லிம்கள் நிதானத்தை கைவிடாது, உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினரை தொடர்புகொண்டு, அதன்மூலம் பாதுகாப்பு உயர் தரப்பினரை தொடர்புகொள்வோமாயின் பிரச்சினைகளுக்கு இலகுவில் திர்வு பெற்றுக்கொள்ள முடியுமெனவும் என்.எம். அமீன் மேலும் தெரிவித்தார்.

Post a Comment