Header Ads



ரவூப் ஹக்கீம் முதுகெலும்புடன்தான் எழுந்து நிற்கிறாரா..?



எஸ்.றிபான்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சியை அமைத்துக் கொள்ளும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டாலும், ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான பலமான போட்டி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையேதான்  நிலவுமென்று எதிர் பார்க்கப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட தீர்மானித்தபோது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிதான் மீண்டும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தினைக் கைப்பற்றும் என்று அரசியல் ஆவாளர்கள் பலரும் கருதிய நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் திடீரென  தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.

முஸ்லிம் காங்கிரஸின் இவ்வறிவிப்பால் கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக இருந்த இரு முனைப் போட்டியானது மும்முனைப் போட்டியாக மாற்றமடைந்துள்ளது.

ஆயினும், எந்தக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலும், தனித்து ஆட்சியமைத்துக் கொள்வதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியாதவாறே தேர்தல் முடிவுகள் அமைவதற்கு வாப்புக்கள் இருக்கின்றன. இதனால், கிழக்கு மாகாண சபையில் ஒரு கூட்டு ஆட்சியே அமையும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனும், தமிழத் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து கொள்ளும் அரசியல் போக்கு முஸ்லிம் காங்கிரஸிடமே காணப்படுகின்றது. இதனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸிற்கு அதிக மவுசு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

இந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றதென்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வியாகும். முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் காலங்களிலும், அதன் பின்னரும் சமூகம் பற்றி அதிகம் குரல் கொடுத்தாலும், அக்கட்சிக்குள் தொடர்ச்சியாகக் காணப்பட்டு வரும் பதவிகளுக்கான போட்டியால் அக்கட்சி குரல் கொடுத்த பல விடயங்கள் இன்றும் தேக்க நிலையிலேயே இருக்கின்றன.

ஆதலால், முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின் எடுக்கும் தீர்மானம் முஸ்லிம் சமூகத்திற்கு காத்திரமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் முஸ்லிம் காங்கிரஸ் சமூக சிந்தனையுடன் செயற்படும் கட்சி என்ற நற்பெயரைப் பெற்றுக் கொள்ளும்.

சமூகப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, தமது கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு முதலிடம் வழங்கி சமூகப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்காது முடிவுகளை எடுக்குமாயின், முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களிடையே தமது செல்வாக்கினை மெதுவாக இழக்க வேண்டியேற்படும்.

நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கீடுகள், முஸ்லிம் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் போன்ற காரணங்களினால், முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் அபிவிருத்திகளை விடவும், நிம்மதியுடன் தலை நிமர்ந்து வாழவே விரும்புகின்றார்கள்.

முஸ்லிம் மக்களின் இந்த மனோ நிலையை புரிந்து கொண்டு எந்தக் கட்சி தமது தீர்மானங்களை அமைத்துக் கொள்ளுமோ அக்கட்சியையே மக்கள் தங்களின் குரலாக தேர்வு செவார்கள்.

ஆனால், முஸ்லிம் கட்சிகள் சமூகப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, தமது கட்சிப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பது கசப்பான உண்மையாகும்.

அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ், அக்கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூசல் மற்றும் மாவட்ட அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவதில் எண்ணிக்கையில் ஏற்பட்ட இழுபறிகள் காரணமாகவே  தனித்துப் போட்டியிடுகின்றது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இறுதி நேரத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கு முடிவு எடுத்ததன் காரணமாக தாம் முதுகெலும்புடன் சபையில் நிற்பதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கொழும்பில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசிதம்பரத்தின் நினைவுப் பேருரையில் தெரிவித்துள்ளார்.

இவரின் கருத்துப்படி பார்க்கின்ற போது, முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுக் கொண்ட 12 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு இடங்கள் கிடைத்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டால் முதுகெலும்பு அற்றவராகவே ரவூப் ஹக்கீம் இருந்திருப்பார் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

தனித்துப் போட்டியிடுவதன் மூலம்தான் முதுகெலும்புடன் நிமிர்ந்து நிற்க முடியுமென்று தெரிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ரவூப் ஹக்கீமும் அவரது சகாக்களும் ஈடுப்பட்டதானது எதற்காக என்று கேட்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் மனச்சாட்சி என்று கூறும் ரவூப் ஹக்கீம் தாம் முதுகெலும்புடன் நிற்க முடியாத தீர்மானத்திற்கு போவதற்கு பேச்சுக்களில் ஈடுபட்டமையை சந்தர்ப்ப சூழ்நிலை என்று அழைப்பதா அல்லது அழுத்தங்களுக்கு உட்பட்டு இருந்தமையென்று கூறுவதா?

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் விட்டுக் கொடுப்புடன் செயற்படாவிட்டல் நிலைமை மோசமாகுமென்று எச்சரித்துள்ளார். சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல் வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே இணைந்துள்ளோம். அதற்காக சோல்வதற்கெல்லாம் தலையாட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களின் கருத்துக்களை அவதானிக்கும் போது முஸ்லிம் காங்கிரஸ் இப்போதைக்கு அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு அரசாங்கத்தை விட்டு விலகும் நிலைமைகள் தோற்றம் பெறலாம்.

கிழக்கு மாகாண சபைத்  தேர்தலின் முடிவுகள் ஒரு கூட்டாட்சிக்கே வழிவகுக்கும். இதனால், முஸ்லிம் காங்கிரஸ் எந்தக் காரணம் கொண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடாதென்பதில்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மிகவும் உறுதியாகவே செயற்படும் என்பது தெளிவானதாகும். அதனால் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளும். இதன் காரணமாக அரசாங்கமும் முஸ்லிம் காங்கிரஸை தமது பக்கம் இழுத்துக் கொள்ளுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.

முஸ்லிம் காங்கிரசும் தமக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியைப் பயன்படுத்துவதற்கு முற்படுமாயின் சமூகம் சார்ந்து பலவற்றை அடைந்து கொள்ளலாம். இதே வேளை அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் முன் வைக்கும் அனைத்துக்கும் இறங்கிப் போகுமென்று கூறவும் முடியாது. கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் தேசிய அரசியலில் எதிர்த் தாக்கங்களை ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும் என்பதில் அரசு மிகக் கவனமாகவே இருக்கும்.

ஏனெனில், இன்றைய அரசாங்கத்தில் உள்ள ஹெல உறுமய போன்ற பௌத்த தீவிரவாதக் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகள் பலவற்றிக்கு அரசாங்கம் இணங்கிக் கொள்ளுமாயின் அதனை இனவாதமாக்கி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் பௌத்த மேலாதிக்கவாதிகளின் ஆதரவை இல்லாமல் செயும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

தமக்கு ஏற்பட இருக்கும் கிராக்கியை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தேவைகள் குறித்து மிகச் சரியாக பயன்படுத்தாது போனால், அக்கட்சி முஸ்லிம்கள் மத்தியில் விரைவாக செல்வாக்கு இழந்து போவிடும்.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் அதிகமானோர் தமக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டும். கொந்தராத்துக் கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் அக்கறை செலுத்துகின்றவர்களாகவே உள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்காகவா அல்லது அக் கட்சியிலிருந்து தெரிவு செயப்படும் பிரதிநிதிகளுக்காகவா என்று கேட்க விரும்புகின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுதல் என்ற பாத்திரத்தில் உறுதியாக நின்று கொண்டிருந்ததேயன்றி, தனித்துப் போட்டியிட வந்தால் என்ன செய வேண்டுமென்பதற்கான எந்தவொரு ஆயத்தமும் இல்லாத நிலையிலேயே இருந்துள்ளது. கட்சியின் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுப் பத்திரத்தினை மட்டும் பெற்றுக் கொண்டால் தனித்துப் போட்டியிட முடியுமா? முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று முடிவான போது வேட்பாளர்களை தேட வேண்டிய அவலத்திற்குள் முஸ்லிம் காங்கிரஸ் அகப்பட்டுக் கொண்டது. இதன் காரணமாக சில பிரதேசங்களில் கட்சியின் ஆதரவாளர்களை எந்த விதத்திலும் கலந்தாலோசிக்க நேரம் இருக்க வில்லை.

உயர்பீடக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதேச சபைகளின் தவிசாளர்களை வேட்பாளர்களாக நியமிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. மேலும், வேட்பு மனுத் தாக்கல் பத்திரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பூர்த்தி செயும் வரை முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கும் கட்சிக்குள் தேர்தலை மட்டும் கருதி இணைந்து கொண்டவர்களுக்கும் இடம் அளித்தமையும், மக்கள் மத்தியில் செல்வாக்குக் குறைந்தவர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பது முஸ்லிம் காங்கிரஸின் திட்டமில்லாப் போக்கையும், அதன் அவசரத் தன்மையையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.

இதே வேளை, முஸலிம் காங்கிரஸிற்கு அதிக இடங்கள் வழங்கக் கூடாதென்று வரிந்து கட்டிக் கொண்டு நின்ற தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட திட்டமிடாத வகையிலேயே முஸ்லிம் காங்கிரசுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தபோது இக்கட்சிகள் மகிழ்ச்சி அடைந்து கொண்டன. ஆனால், அம் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் விலகினால் தாம் வெற்றி பெறும் வகையில் வேட்பாளர்களை நிறுத்திக் கொள்ளலாமென்று கனவு கண்டாலும், அதனை நிறைவேற்றிக் கொள்ளும் வாப்புகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பில் நிறுத்த இருந்த ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பதிலாக வேறு ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய பொறுப்பு தேசிய காங்கிரஸிற்கும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஒப்படைக்கப்பட்டன.

இதனால், இக் கட்சிகள் வேட்பாளர்களை அவசர அவசரமாகத் தேட வேண்டி ஏற்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தேசிய காங்கிரஸ் 05 வேட்பாளர்களையும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 2 வேட்பாளர்களையும் நிறுத்த வேண்டியேற்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு முஸ்லிம் கட்சிகள் வரிசையில் மூன்றாம் நிலையே காணப்படுகின்றது.மேற்படி இரு கட்சிகளும் தமது செல்வாக்கை விடவும் அதிக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இக் கட்சிகளின் வாக்குகள் சிதறுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சிங்கள வேட்பாளர்கள் அதிகம் வெற்றி பெற்று முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றிக்கான வாப்புக்களை குறைத்து விடும்.

ஆக மொத்தத்தில் கட்சிகள் தத்தமது நலன்களையும் இருப்பையும் பற்றி சிந்திக்கின்றனவேயொழிய சமூகத்தின் நலன்களையும் இருப்பையும் பற்றி சிந்திக்கவில்லை என்பதற்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் களம் நல்லதொரு சாட்சியாகவே வரலாற்றில் இருக்கப் போகிறது என்பது மட்டும் உண்மை. -நன்றி விடிவெள்ளி
 

2 comments:

  1. this is good an good article and i suggest to send this article to each and every muslim condidate in eastern provincial electiona and muslim party leaders. well done vidiwelli.pls if u can forward this article to them and print and issue after jummah prayer in eastern province all jummah masjid

    ReplyDelete
  2. நன்றி ரிபான், நன்றி விடிவெள்ளி.

    எத்தனை பேர் இதனை முழுமையாக வாசித்து சிந்திக்கப் போகின்றார்கள்?

    ReplyDelete

Powered by Blogger.