Header Ads



கிழக்கு தேர்தலில் முஸ்லிம்களே தீர்மானிக்கும் சக்தி - இது சம்பந்தனின் வாக்குமூலம்


தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் தந்தை செல்வா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போராட்டத்தை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்துள்ளார்கள். அப்பயணம் இன்னும் தொடர்கின்றன. பயணத்தின் நிறைவாகக் கிடைக்கும் பலாபலன்களை முஸ்லிம் மக்களும் அனுபவிக்க வேண்டும். எனவே எதிர்வரும் தேர்தலில் கிழக்கு மாகாண சபை ஆட்சியை தமிழ் பேசும் மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து கைப்பற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இதனை நாம் வரவேற்கிறோம். வெளியே வந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிலேயே நிற்க வேண்டும். மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போகிறார்கள். அந்தப் பாதையில் இலக்கை  அடையும் சக்தியாகத்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் சம்பந்தன் தனது வாசஸ்தலத்தில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக போட்டியிடத் தெரிவு செய்யப்பட்டவர்கள்,  போட்டியிட விண்ணப்பித்தவர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றும் போது  தெரிவித்தார்.  திருகோணமலை மாவட்ட முன்னை நாள் எம். பி.யும் தமிழரசுக் கட்சி திருகோணமலைக் கிளையின் தலைவருமான க. துரைரட்ணசிங்கம் தலைமையில்  கலந்துரையாடல் இடம்பெற்றது.

“பெரும்பான்மை இன பேரினவாதச் சக்திகள் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும். மாகாணசபை ஆட்சி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று கோஷமிடுகின்றனர். அது மாத்திரமல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்ற “ அரபு வசந்தம்” போன்ற கிளர்ச்சியை உருவாக்க சம்பந்தனும் ஏனைய சக்திகளும் ஈடுபட்டு வருகின்றன என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறாக “அரபு வசந்தம்’ மாதிரியான சதியை ஏற்படுத்துவதில் நான் ஈடுபடவில்லை. நீங்களே வினையைத் தேடிக் கொண்டால் நாம் அதற்குப் பொறுப்பல்ல” என்றும் சம்பந்தன் மேலும் கூறினார்.

அரசாங்கத்தை நம்பக் கூடாது, நம்பவும் முடியாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்கள் சார்பாக திடமான முடிவை எடுக்க வேண்டும். அம்முடிவு தமிழ் பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை அடையக் கூடியதொன்றாக அமைய வேண்டும்.  தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தாராளமாக விட்டுக் கொடுத்து நடந்துகொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அங்கொரு கால், இங்கொரு கால் என்றில்லாமல் உறுதியுடன் செயல்படுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

இன்று மாகாண சபை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மாகாண சபைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. பாதுகாப்பு, காணி உட்பட பாரம்பரிய மண்ணை நாமே ஆழக் கூடியதான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். நியாயமான, நிரந்தரமாக,  நிலைத்து நிற்கக் கூடியதான  அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் துணை நிற்கின்றது. நிரந்த சமாதானத்திற்கான முயற்சி இதுவாகும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.