புரிந்துணர்வின் அடிப்படையிலேயே மு.கா. தனித்துப் போட்டி - அமைச்சர் மைத்திரிபால
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் முடிந்ததும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து செயற்படுமென நம்பிக்கை கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக நவியாழக்கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான கட்சியாகிய ஸ்ரீ லங்கா சுதந்திர காட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியாலளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கையில் ;
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்மோடு பிரிந்து சென்று விட்டதாக எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் அந்தக் கட்சி அரசாங்கத்தை விட்டு பிரிந்து செல்லவில்லை. எம்மோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி புரிந்துணர்வின் அடிப்படையிலேயே வேறாக போட்டியிட தீர்மானித்துள்ளனர்.
பல முஸ்லிம் கட்சியினர் எம்மோடு இருக்கின்றனர். இதில் இந்த கட்சிகளை சேர்ந்த பலர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோருகின்றனர். இந் நிலையில் வேட்பாளர் பங்கீடுகளில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்மோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வேறாக போட்டியிட தீர்மானித்தார். இந்நிலையில் வட மத்திய மாகாணத்தில் அநுராதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எம்மோடு இணைந்தே போட்டியிடுகின்றது.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமின்றி எம்மோடு இருக்கும் சில கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தி புரிந்துணர்வின் அடிப்படையில் தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இது எமக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.
கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடனான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக கூறுகின்றீர்கள். அப்படியாயின் தேர்தலின் பின்னர் அந்த கட்சி உங்களோடு இணைந்து செயற்படுமா?
பதில்: ரவூப் ஹக்கீம் அமைச்சரவையின் அமைச்சர் என்ற வகையில் தேர்தல் முடிந்த பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவாரென நம்பிக்கை கொள்கின்றோம்.
Post a Comment