Header Ads



புனித ரமழான் வேண்டுகோள்..!


முஸ்லிம்களின் பிரதான கடமைகளில் ஒன்றான புனித ரமழான் நம்மை வந்தடைந்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்கடி, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரம் ஆகிவற்றுக்கு இடையிலேதான் நமது முஸ்லிம் சமூகம் இந்த ரமழானை இன்ஷா அல்லாஹ் எதிர்கொள்ளப்போகிறது.

ஆகவே இந்தமுறை ரமழான் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள அதேவேளை மறுபுறம் நமது முஸ்லிம் சமூகம் சிந்திக்கவேண்டிய சில விடயங்களையும் இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

புனித ரமழான் மாதம் வந்துவிட்டாலே இதன் இரவுகள் நமக்கு மாத்திரம் சொந்தமாக்கப்பட்ட இரவுதான் என்றும் நம்மில் சில முஸ்லிம்கள் நினைத்துக்கொண்டுள்ளார்கள். இந்த நினைப்புதான் ஏனைய சமூகங்களுடனான கசப்புணர்வுக்கு தூபமிடும் பிரதான காரணி என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

வீதிகளில் விளையாடுதல், சத்தம் போடுதல், பஜா அடித்தல், ஊரவர்களின் சுவரில் உட்கார்ந்து கதையளத்தல் உள்ளிட்ட இன்னும்பல நடத்தைகளில் நமது முஸ்லிம் இளைஞர்கள் இந்த ரமழான் மாதத்தில் மாத்திரமதான் ஈடுபடுகிறார்கள் என்பது என்னவோ கசப்பான உண்மை.

நாங்கள் உங்கள் வீட்டுக்குள் வந்தா விளையாடுகிறோம், வீதியில்தானே விளையாடுகிறோம் என்று நமது முஸ்லிம் இளைஞர்களில் சிலர் வாதம் புரிவதும் இந்த ரமழான் மாதத்தில்தான் அதிகம்.

பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள், தராவிஹ் தொழுகை நடைபெறும் நிலையங்களிலும் ஒலிபெருக்கிகள் கட்டுப்பாடின்றி பாவிக்கப்படுவதும், அதனால் மாற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் இந்த ரமழான் மாதத்தில்தான். இஸ்லாமிய சீர்திருத்தப்பணியில் ஈடுபடும் அமைப்புகளிடையே முரண்பாடுகள் முட்டிமோதிக் கொள்வதும் இநத ரமழான் மாதத்தில்தான் அதிகம் நடைபெறுகிறது.

இவை முஸ்லிம் சமூகத்தின் உள்விவகாரமாக இருந்தபோதிலும், இந்த ரமழான் மாதத்தில் நமது முஸ்லிம் சமூகம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகிறது. குறிப்பாக நமது முஸ்லிம் ஊர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசிமாகிறது. இவ்வாறான செயற்பாடு மூலம் ரமழான் மாதத்தில் தோன்றும் கிறீஸ் மனித அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட முடியும். கடந்தவருட ரமழானில் ஏற்பட்ட கிறீஸ் மனிதனின் குழப்பம் நமது முஸ்லிம் சமூகத்தையும் விட்டுவைக்கவில்லை. அதனால் ஏற்பட்ட விளைவுகளும் பல.

அத்துடன் ரமழான் மாதத்தில் வம்புச் சண்டைக்கு வரும் மாற்று மதத்தவர்களுடன் நிதானமான போக்கை கடைபிடிப்பதும், நம்மவர்கள் ஏற்பாடு செய்யும் இப்தார் நிகழ்வுகளில் மாற்றுமதர சகோதரர்களை அழைப்பதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், பிற சமூகங்களுடன் நல்லிணக்கத்தை வளர்க்கவும் இது உதவும்.

எனவே இந்த புனித ரமழான் மாதத்தில் விழிப்புடனும், நிதானத்துடனும் செயற்பட உறுதிபூணுவதுடன், எந்தவகையிலும் எமது தனிநபர் செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்திற்கு எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்தாத வகையில் சிந்தித்து செயற்படுவோம்..!

No comments

Powered by Blogger.