வவுனியாவில் புலிக்கைதிகளின் நாடகம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவே..!
சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடனே வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் சிறைக்காவலர்களை பணயம் வைத்தனர் என்பது தெரிய வந்துள்ளது என்று பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். டபிள்யூ. எம். சந்திரசிறி ரணவன்ன தெரிவித்தார்.
வவுனியா சிறைச்சாலையில் கடந்த 29ம் திகதி இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளமை, அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிறைச்சாலையில் கைதிகளினால் பணயமாக வைக்கப்பட்டிருந்த மூன்று சிறைச்சாலை அதிகாரிகளை மீட்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முன்னரே அதிரடிப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிலிருந்து நவீன கையடக்க தொலைபேசி மூலம் சிறைச்சாலைக்குள் தகவல்களை வழங்கிய மூன்று சந்தேக நபர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக சுட்டிக்காட்டிய அவர், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகளையும் சிறைச்சாலைக்குள் இருந்து அதிநவீன செட்டலைட் தொலை பேசி உட்பட 54 கையடக்கத் தொலை பேசிகளை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
சிறைச்சாலையிலிருந்து சர்வதேச சமூகத்தினருடன் அதிநவீன செட்டலைட் கையடக்க தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது என்றும் தெரிவித்தார். இது தவிர பெருந்தொகையான சிம் காட்கள், மொபைல் போன் சார்ஜர்கள் மற்றும் பெருந் தொகையான உபகரணங்களை மீட் டெடுத்துள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையில் சுமார் 201 விளக்கமறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 170 பேர் தமிழ் கைதிகளாகும். இவற்றில் 28 புலிகள் இயக்க சந்தேக நபர்கள் அடங்குவர். உச்ச நீதிமன்றின் உத்தரவுக்மைய 28 புலி சந்தேக நபர்களில் மூவர் பூசா சிறைச்சாலைக்கு அண்மையில் மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் சரவணபவன் என்பவரை மீண்டும் அழைத்துவர கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த கைதிகள் மூன்று சிறை அதிகாரிகளை கேடயமாக பயன்படுத்தி வந்தனர். கடந்த 28ம் திகதி மாலை இவர்களுடன் வவுனியா மஜிஸ்திரேட் நீதவான் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த கைதி கள் தொடர்ந்தும் குழப்ப நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய சிறைச்சாலையில் சிக்கியிருந்த சிறை காவலர்களையும் ஏனைய சிறைக் கைதிகளையும் மீட்கும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
விசேட அதிரடிப் படையினர் விசேட ஆயுதம் மற்றும் தந்திர பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்க தலைமையில் 40 பேர் கொண்ட குழுவும், அதிரடிப் படையின் சிறிய பிரிவின் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். குண ரட்ன தலைமையில் 40 பேர் கொண்ட குழுவும், 100 பொலிஸார், 50 கலகம் தடுக்கும் பொலிஸார், 50 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் 29 ம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்த அதிரடிப்படையினர் 45 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
தாங்கள் உண்ணாவிரதம் இருப்பதாக செய்திகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் சிறைக்கைதிகள் தகவல் வெளியிட்டு வந்த நிலையில் சுமார் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு உலர் உணவு வகைகள், பிஸ்கட், ஒருமாதத்திற்கு தேவையான தண்ணீர் இருந்ததை மீட்பு நடவடிக்கையின் பின்னர் மேற்கொண்ட சோதனையில் மீட்டெடுக்க முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறைக்கைதிகள் அதிரடிப் படையினரை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களை தவிர்க்கும் வகையிலும், ஏனைய சிறைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்கும் நோக்குடன் கண்ணீர்ப் புகையைத் தாங்கள் பயன்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கம்புத் தடிகள், கம்பிகள் போன்றவற்றையும் மீட்டெடுத்துள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமையல் பாத்திரங்கள், 23047 ரூபா பணம் கஞ்சா பொதிகள் மற்றும் உபரகணங்களையும் மீட்டுள்ளனர்.
இது தொடர்பான பல்வேறு மட்ட விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். - தினகரன்

Post a Comment