Header Ads



யாழ்ப்பாணத்தில் வாக்காளர் மீள்பதிவு விண்ணப்பங்கள் ஏற்பு

யாழ். மாவட்டத் தேர்தல் தொகுதிக்கான வாக்காளர் மீள்பதிவு படிவங்கள் யாவையும் இன்று முதல் கையேற்கப்படும் என யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 31ம் திகதி வரை படிவங்கள் கையேற்கப்படும் எனவும், இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், கிராம அலுவலர்கள், பிரதேச செயலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாண்டிற்கான வாக்காளர் மீளாய்வுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வாக்காளர் இடாப்பு மீள்திருத்தம் செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். தேர்தல் மாவட்டத்தில் தம்மை வாக்காளராக பதிவு செய்வதற்காக இதுவரை காலமும் மக்களுக்கு வாக்காளர் மீளாய்வுப் படிவம் வழங்கப்பட்டு வந்தன. அதனைப் பெற்று நிரப்பி கிராம அலுவலர் ஊடாக எமக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டிருந்தது.

அதன்படி மீளாய்வுப் படிவங்களை கையேற்கும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அப் படிவங்களை கிராம அலுவலர்கள் தேர்தல் செயலகத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 31ம் திகதிக்கு முன்னதாக கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் முழுமையான கவனமெடுத்து, செயற்படுமாறு பிரதேச செயலர்கள் ஊடாக கிராம அலுவலர்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகளில் உயர்தரத்தில் கற்கும் மாணவர்களிடம் பாடசாலை அதிபர் ஊடாக இது தொடர்பில் அறிவூட்டல் நிகழ்வும் இடம்பெற்று வருகின்றன.

கிராம அலுவலர்கள் தாம் பெற்றுக் கொண்ட படிவங்களை இம்மாதம் 15 ம் திகதிக்குள் எம்மிடம் கையளிக்க வேண்டும். ஆயினும் அதன் பின்னரும் படிவங்களைப் பெற்று கையளிக்கலாம்.

அதேவேளை, வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோர், தாம் இலங்கைக் குடியுரிமை உடையவர்கள் என ஆவணங்கள் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தினால் அவர்களை வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளப்படுவர் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.