சமூக நலன்களை கருத்திலெடுக்காத முஸ்லிம் கட்சிகள்
(19-07-2012 அன்று வெளியான விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இது)
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டது போலவே அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இணைந்திருந்தவர்கள் பிரிவதும் பிரிந்து சென்றவர்கள் இணைவதும் அரசியல் களத்தில் சர்வ சாதாரணமான நிகழ்வுகள்தான். கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் அதுதான் நடக்கத் தொடங்கியிருக்கிறது.
ஆனாலும் இந்த அரசியல் கள நிகழ்வுகளுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்திருப்பதுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிரடித் தீர்மானமாகும்.
நேற்றுக் காலை 11 மணி வரைக்கும் ஊசலாடிக் கொண்டிருந்த மு.கா.வின் நிலைப்பாடு இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்துடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடுவது எனும் தீர்மானத்தை கைவிட்டு தனித்து நின்று மரச்சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கினால் அதிருப்தியடைந்திருக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த களமாகவே எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நோக்குகிறார்கள் என்பதே பொதுவான உண்மையாகும்.
இந்த உண்மையை மு.கா. தலைமையும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் நன்கு விளங்கியிருந்த போதிலும் ஏற்கனவே மத்திய அரசாங்கத்தில் தாம் வகித்து வரும் அமைச்சுப் பதவிகளுக்கும் பிரதியமைச்சுப் பதவிகளுக்கும் ஆப்பு விழுந்துவிடலாம் எனும் அச்சத்தில் இரு தலைக் கொள்ளி எறும்புகளாகவே கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்தார்கள்.
தற்போது மு.கா. மரச் சின்னத்திலும் ஏனைய இரு முஸ்லிம் கட்சிகள் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
தத்தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தீர்மானிப்பதற்கு அவற்றுக்கு உரிமை இருக்கின்ற போதிலும் மக்களின் வாக்குகளால் அரசியல் நடாத்தும் இவர்கள் மக்களது அபிலாஷைகளையும் சமூகத்தின் நலன்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்பதே இந்த இடத்தில் முக்கியமானதாகும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் கேட்பதாக முடிவெடுத்திருப்பதற்குக் காரணம் தமது வேட்பாளர்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்பதுவே அன்றி முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காக அல்ல என்பதையும் இந்த இடத்தில் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் அக் கட்சிக்கு அக்கறை இருந்திருந்தால் ஏற்கனவே அது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பேரம் பேசியிருக்க முடியும். ஆனால் அவ்வாறான எந்தவொரு முன்னெடுப்புகளையும் மு.கா. மேற்கொண்டிருக்கவில்லை. கட்சியின் செயலாளரால் தயாரிக்கப்பட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை ஜனாதிபதி எடுத்த எடுப்பில் நிராகரித்த பின்னரும் கூட மு.கா. அரசாங்கத்துடன் இணைந்து நிபந்தனைகள் எதுவுமின்றி போட்டியிடுவது எனும் தீர்மானத்திலேயே உறுதியாகவிருந்தது.
ஆனால் தற்போது தமது கட்சியின் வேட்பாளர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் போதிய இடம் ஒதுக்கப்படவில்லை எனும் காரணத்தை முன்னிறுத்தியே இன்று மு.கா. தனித்துக் கேட்கும் தீர்மானத்திற்கு வந்திருக்கின்றது என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்து கொள்வது அவசியமாகும்.
மறுபுறம் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து கேட்கும் ஏனைய இரு முஸ்லிம் கட்சிகள் கூட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கை அரசியல் நடத்தினாலும் இந்தத் தேர்தலை முன்னிறுத்தி அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என்பதும் அவற்றின் அரசியல் வங்குரோத்து நிலைக்குத் தக்க சான்றாகும்.
ஆக கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு தேர்தலாகவன்றி மக்களின் அபிலாஷைகளுக்கு விடிவு தருகின்ற தேர்தலாக அமையப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும். அந்த யதார்த்தத்தை விளங்கியே மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
சாதாரண விவகாரங்களுக்குக் கூட மாதக் கணக்கில் சிந்தித்து முடிவெடுக்கும் நாம் அரசியல் எனும் நமது தலைவிதியைத் தீர்மானிக்கும் களத்தில் மாத்திரம் வெறுமனே உணர்வுகளுக்கும் சலுகைகளுக்கும் அடிபணிந்து தீர்மானங்களை எடுத்துவிடுகிறோம்.
அதுதான் நமது அவலங்களுக்கெல்லம் முதற்காரணம் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்?
Post a Comment