வடக்கு முஸ்லிம்களின் இருப்புக்காக களத்தில் குதிக்கிறது ஜம்மியத்துல் உலமாவும், பைத்துல்மாலும்
வடக்கு முஸ்லிம்களின் நலன்கருதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், பைதுல்மால் நிதியமும் இணைந்து தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவிருப்பதாக யாழ் முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
இதுகுறித்து யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அந்த வட்டாரங்கள் மேலும் தகவல் தருகையில்,
வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் துயரங்களை தீர்த்துவைக்கும் முழுப்பொறுப்பும் முஸ்லிம் சமூகுத்தை சார்ந்துள்ளது. இதில் ஜம்மியத்துல் உலமா சபையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறது. எனவே இதுகுறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பைத்துல்மால் நிதியத்துடனும் பேசப்பட்டது. இவ்விரு தரப்புகளிடமிருந்தும் சாதகமான பதில் கிட்டியுள்ளது. தொடர்ந்தும் இதுபற்றிய பேச்சுக்கள் நடைபெற்றுவருகின்றன.
வடமாகாணத்தில் முஸ்லிம்கள் மீண்டும் குடியேற தயார் நிலையில் உள்ளனர். இருந்தபோதும் அவர்களுக்கான பிரதான தேவை குடியிருப்புகளாகும். அந்த குடியிருப்புகளை அரசாங்கத்தினால் மாத்திரம் நிறைவேற்றிவிட முடியாது. இந்நிலையில் வடக்கு முஸ்லிம்களின் பிரதான தேவையாக உள்ள குடியிருப்புகளை இலங்கை வாழ் முழு முஸ்லிம் சமூகத்தினதும் பங்களிப்புடன் அமைத்துக்கொடுப்பதும் இதன் உத்தேச திட்டமாகும்.
இதனடிப்படையில் குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஜும்ஆ தினத்தன்று நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் இதுபற்றிய விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளதுடன், முஸ்லிம்கள் தமது மாதாந்த சம்பளத்தில் ஒருநாள் சம்பளத்தை வடக்கு முஸ்லிம்களின் நலனுக்காக ஒதுக்கித்தருமாறு வேண்டுகோள் முன்வைக்கப்படவுள்ளது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை வாழ் முஸ்லிம்களும் இவ்வாறு தமது சம்பளத்தில் ஒருநாள் சம்பளத்தை இத்திட்டத்திற்காக வழங்கமுடியும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் ஆதரவளிப்பதன் மூலம் வடக்கு முஸ்லிம்களின் எதிர்கால இருப்பை ஓரளவேனும் பாதுகாக்க முடியுமெனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment