Header Ads



புலிகளின் தாளத்திற்கு ஏற்றவகையில் ஆடாதீர்கள் - ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கும் எச்சசொச்சங்களதும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களதும் விருப்பங்களுக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் அமைப்பு நடந்துகொள்ளக்கூடாது என்று இலங்கை அடித்துக்கூறி இருக்கிறது.

புலம்பெயர் தமிழர்களும் வெளிநாடுகளில் வாழும் புலிகளும் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பன்முகச் செயன்முறைகளைக் கொள்ளையிட (ஹையாக்) ஐ.நாவும் அதன் உறுப்பு நாடுகளும் அனுமதிக்கக்கூடாது என்று ஐ.நாவின் ஜெனிவா அலுவலகத்துக்கான இலங்கையின் புதிய தூதுவராகப் பதவியேற்றுள்ள ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் பணிப்பாளரான காஸிம்ஜோமார்ட் டொகாஜெவைச் சந்தித்துப் பேசிய ஆரியசிங்க இதனை வலியுறுத்தினார் என்று வெளியுறவுத் துறை அமைச்சு கூறியுள்ளது.

கடந்த வாரத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சந்திப்புக் குறித்து அமைச்சு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் சபையையும் உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் அமைப்பு நடைமுறைகளை ஒழுங்கு விதிகளை சரியாக ஒழுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் என்று அந்தக் குறிப்புக் கூறுகின்றது.

இந்தச் சந்திப்பின் போது, ஐ.நாவின் பொறிமுறையில் மதிப்பார்ந்த முறையில் இலங்கை பங்காற்றியிருப்பதை நினைவுபடுத்திய புதிய தூதுவர், ஐ.நாவுடனும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனும் பல தரப்பட்ட பேச்சுக்களை நடத்துவதற்கான தனது உளக்கிடக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ரவிநாத் ஆரியசிங்க தனது புதிய பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக பெல்லியம், லக்ஸம்பேர்க், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான தூதுவராகப் பணியாற்றி இருக்கிறார். இந்தியா மற்றும் அமெரிக்காவிலுள்ள தூதரகங்களில் இரண்டாம் நிலை அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

No comments

Powered by Blogger.